கல்லணைக் கால்வாய் கடைமடை பகுதியில் 168 கண்மாய்கள் உள்ளன. இக்கண்மாய்கள் மூலம் சுமார் 27 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் நீர்பாசன வசதி பெற்றுவருகின்றன. கடந்த நான்கு ஆண்டு காலமாக மழை இல்லாமல் விவசாயிகள், பொதுமக்கள் கடும் வறட்சியை சந்தித்துவருகின்றனர்.
கடந்தாண்டு காவிரி படுகையில் தண்ணீர் நிரம்பி அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டு, கல்லணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. கல்லணை வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாமலும், கரைகள் பலப்படுத்தப்படாத காரணத்தாலும் கரை உடைப்பெடுத்து விவசாயிகளுக்கு தண்ணீர் சென்றடையாமல் வீணாக கொள்ளிடத்திற்க்கு திருப்பி விடப்பட்டது.
இந்நிலையில் இந்தாண்டும் அதே சூழ்நிலையில் வாய்க்கால் தூர்வாரப்படாமலும், கரைகள் பலப்படுத்தப்படாமலும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. மேலும், கரைகள் உடைப்பெடுத்துவிடக் கூடும் என்று எண்ணி 300 கன அடி தண்ணீர் திறந்துவிடக் கூடிய இடத்தில் வெறும் 10 கன அடி நீரே திறந்துவிடப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். 10 நாட்களில் நிரம்ப வேண்டிய ஏரி கண்மாய்கள் இன்று 22 நாட்களாகியும் இதுவரை கண்மாய் தலைப்பைக்கூட தொடவில்லையென விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.
மேலும் கால்வாய்களை தூர்வாராமல் கண்மாய்களை குடிமராமத்து செய்வதாகக் கூறி லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஆண்டு தூர்வார்வதற்காக விவசாயிகள் தங்கள் சொந்த செலவில் ரூ. 30 ஆயிரத்தில் செய்து முடித்த வேலையை, இந்தாண்டு அதே வேலைக்கு ரூ.7 லட்சம் கணக்கு காண்பித்து மக்கள் பணத்தை கொள்ளையடிக்கும் அரசாக திகழ்கிறது என்றனர். எனவே மக்கள் பணத்தை பொய் கணக்கு காண்பித்து கொள்ளையடிப்பதை ஆதாரத்துடன் வழக்கு தொடரவுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.