சென்னை: திருச்சி பொன்மலைப் பணிமனையில் இயங்கி வரும் ரயில்வே தொழிற்சாலையில் பணியாற்றும் ஏற்கெனவே பயிற்சி பெற்ற நபர்களை (apprentice) நிரந்தரமாகப் பணியமர்த்த வேண்டும் எனக் கோரி சென்னை ரயில்வே பொதுமேலாளர் அலுவலகம் முன்பு இன்று (ஜூலை.08) போராட்டம் நடத்தப்பட்டது.
மெக்கானிக், எலக்ட்ரீசியன் போன்ற பணிகளில் ஏற்கெனவே பயிற்சி பெற்ற நபர்களுக்கு (apprentice) மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணி மூப்பு அடிப்படையில் நிரந்தரப்பணி வழங்குவது நடைமுறையில் இருந்து வந்தது. கடந்த 2008ஆம் ஆண்டு இதுபோன்ற பயிற்சி முடித்த 500-க்கும் மேற்பட்டவர்களுக்குப் பணி நிரந்தர ஆணை வழங்கப்பட்டது.
நீதிமன்றத்தில் வழக்கு
இருப்பினும், இதுபோன்ற ஏற்கெனவே பயிற்சி பெற்ற நபர்கள் (apprentice) பணி தொடர்பாக பொது அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இதனால் ரயில்வே ஊழியர்களின் வாரிசுகள், அவர்களுக்கு நெருக்கமானவர்கள் மட்டுமே இதுபோன்ற பணியைச் செய்கின்றனர் எனக் குற்றம்சாட்டி, தங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற குழுவினர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதன் காரணமாக 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஏற்கெனவே பயிற்சி பெற்ற நபர்கள் (apprentice) பணி முடித்தவர்களுக்கு பணி நிரந்தரம் செய்வது 13 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்த வழக்குத்தொடர்ந்த சங்கம் போலியானது என்றும், அவர்கள் மூன்றாண்டுகளுக்குப் பிறகு தங்களது சங்கத்தைப் புதுப்பிக்கவில்லை என்றும், இதுதொடர்பான வழக்கில் ரயில்வே வாரியம் தொடர்ந்து ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
ரயில்வே பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பல ஆண்டுகளாக 1,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாய் என குறைந்த விலைக்கு பணியாற்றி உள்ள இவர்கள் தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மேலும் தங்களுக்குப் பணி வழங்காமல் நிறுத்தி வைத்துவிட்டு, திருச்சி பொன்மலையில் 500-க்கும் மேற்பட்ட வடமாநிலப் பணியாளர்களைப் பணியில் அமர்த்தி உள்ளதாகவும், இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறி போவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர்.
இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர்.
இதையும் படிங்க:
பத்திரப்பதிவுத் துறை ஊழல் குறித்த அறிக்கையைத் தாக்கல்செய்ய உத்தரவு