சென்னை: தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவிகள் கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதியிலிருந்து காலியாக உள்ளதால், பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினரின் பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியவில்லை எனக் கூறி, பாமக செய்தி தொடர்பாளரும், வழக்கறிஞர் மற்றும் சமூக நீதிப் பேரவை தலைவருமான கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், ஆணையத்துக்கு தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (அக்.12) விசாரணைக்கு வந்தது. அப்போது, தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்துக்கு கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தலைவர் நியமிக்கப்பட்டதாகவும், கடந்த மார்ச் மாதம் ஒரு உறுப்பினர் நியமிக்கப்பட்டதாகவும் மத்திய அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆணையத்தில் எத்தனை பேர் இடம் பெற்றிருக்க வேண்டும்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பிய போது, ஐந்து உறுப்பினர்கள் இருக்க வேண்டும் என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆணையத்துக்கு அனுமதிக்கப்பட்ட அத்தனை உறுப்பினர்களும் எப்போது நியமிக்கப்படுவர்கள்? என விளக்கமளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 8ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: ஆதரவற்றோர் இல்லங்களை அரசு தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்: நீதிமன்றம் உத்தரவு!