சென்னையில் முதல் உலகின் மிகப்பெரிய நுரையீரல் வால்வை (32 மி.மீ) அறுவை சிகிச்சை இல்லாமல், 61 வயதான நோயாளிக்கு அப்பல்லோ மருத்துவமனை செப்டம்பர் 15ஆம் தேதி அன்று பொருத்தியுள்ளது.
பிறக்கும் போதே இருக்கும் நான்கு விதமான இதய குறைபாடுகளின் காரணமாக ஏற்படும் ஒரு அரிதான நிலை டெட்ராலஜி ஆஃப் ஃபாலட். இந்த குறைபாடு, இதயத்தின் கட்டமைப்பை பாதிப்பதோடு இதயத்திலிருந்து வெளியேறும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை குறைக்க செய்து, உடலின் மற்ற பகுதிகளுக்கும் ஓடக் காரணமாக அமைகின்றன. நுரையீரல் வால்வு படிப்படியாக கசிய ஆரம்பிப்பதற்கு முன்பு வரை அந்த மூதாட்டி நன்றாக இருந்தார்.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2019-ம் ஆண்டு மே மாதம் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு ஆகியவற்றின் காரணமாக மூதாட்டி அனுமதிக்கப்பட்டார். முழுமையான நோய் கண்டறியும் பரிசோதனைகளுக்குப் பிறகு, அவர் கடுமையான வால்வு கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த கசிவு அவரது ரத்தத்தை செலுத்தும் இதயத்தின் வலது பக்க அறைக்கு பரவியதாகவும், பின்னர் அது கொஞ்சம் கொஞ்சமாக நீர்த்துப்போக ஆரம்பித்ததாகவும் பரிசோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும் நுரையீரல் தமனி, நுரையீரலுக்கு ரத்தத்தை கொண்டு செல்லும் இரத்த நாளம் குறிப்பிடத்தக்க அளவுக்கு விரிவடைந்திருந்தது. இதற்கு முறைப்படி சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இதய செயல்பாட்டு மோசமடையும் வகையில் தீவிரமான பாதிப்பு ஏற்பட வழிவகுக்கும்.
அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸின் கன்சல்டண்ட் ஸ்ட்ரக்ச்சுரல் இண்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் மருத்துவர் சி.எஸ். முத்துக்குமரன் , தலைமையிலான மருத்துவர்கள் குழு, ஜூன் 2019-ல் மிக அதிக ஆபத்துள்ள அறுவை சிகிச்சையான, பெர்குடனியஸ் வால்வு பொருத்தும் அறுவை சிகிச்சையைச் செய்ய முடிவு செய்தனர். அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய பலூன் விரிவடையக் கூடிய மிகப்பெரிய செயற்கை வால்வின் அளவு 29 மி.மீ. மட்டுமே இருந்தது. இந்த அளவிலான வால்வு, உடனடி பொருத்துதலுக்கு பொருத்தமானது அல்ல என்ற நடைமுறை சிக்கலும் இருந்தது.
ஆனால் இந்த நீண்டகால காத்திருப்பின் காரணமாக நோயாளியின் நிலை மேலும் மோசமடைந்தது, இதன் தொடர்ச்சியாக அவருக்கு கடுமையான மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இச்சூழ்நிலையில், இந்தியாவின் மெரில் லைஃப் சயின்ஸ்சஸ் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகின் முதல் 32 மிமீ வால்வு, நோயாளியின் நிலைக்கு மிகப் பொருத்தமான தேர்வாக கருதப்பட்டது. இதனால், 32 மிமீ செயற்கை வால்வு மருத்துவ நடைமுறைக்கு பயன்படுத்தப்பட்டது.
இந்த சிகிச்சை குறித்து டாக்டர் முத்துக்குமரன் கூறும்போது, "டெட்ராலஜி ஆஃப் ஃபாலட் பிறவியிலேயே உண்டாகும் இதயக் குறைபாடு. மேலும், பிறந்த 6 மாதத்திலேயே திறந்த இதய அறுவை சிகிச்சை அவசியம் தேவைப்படும் ஒரு பிரச்னை ஆகும். ஆனால் இந்த நோயாளிகளுக்கு குறைப்பாடுகள் உள்ள நுரையீரல் வால்வு இருப்பதால், அவர்களின் வாழ்க்கையில் வால்வை மாற்றுவதற்கு குறைந்தபட்சம் இரண்டு அறுவை சிகிச்சைகள் மேலும் தேவைப்படும். ரெடோ திறந்த இதய அறுவை சிகிச்சையை மீண்டும் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது.
அறுவை சிகிச்சை பயம் காரணமாக இந்த நோயாளிகள் உரிய நேரத்தில் வராமல் மிக தாமதமாக எங்களிடம் வருகின்றனர்.
இந்த சமீபத்திய நவீன தொழில்நுட்பம், இந்த நபர்கள் அனைவருக்கும் ஒரே நாளில் அறுவை சிகிச்சை இல்லாமல் அவர்களது வால்வை மாற்றுவதற்கு உதவும். இந்த புதிய 32 மிமீ வால்வு இதுபோன்ற இதய குறைபாடுகள் மற்றும் பிற அசாதாரண பிரச்னைகளுடன் இருக்கும் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சைமுறைகளை வடிவமைக்கும் வாய்ப்புகளை வெகுவாக அதிகரித்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் மேலும் 2348 பேருக்கு கரோனா உறுதி