பொதுவாக பக்கவாதம் என குறிப்பிடப்படும் உறைவு அல்லது த்ரோம்பஸ் காரணமாக மூளையின் ஒரு பகுதிக்கு ரத்தம் பாய்வது நிறுத்தப்படுகிறது. ரத்த ஓட்டத்தில் ஏற்படும் இந்த குறுக்கீடு, சுற்றியுள்ள மூளை செல்கள் சேதம் அடைவதற்கு வழிவகுக்கும்.
சென்னையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவருக்கு தொடர்ச்சியாக இடது கை பலவீனம் இருந்தது. சில மாதங்களுக்குப் பிறகு தனது இடது காலில் இதேபோன்ற பிரச்னையை உணர்ந்த அவர் குடும்ப மருத்துவரைச் சந்தித்தார். அவருக்கு ஏற்பட்டது பக்கவாதத்தின் அறிகுறிகள் என்பது தெரிய வந்தது.
அவர் தனது மேல் சிகிச்சைக்காக சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையை நாடினார். அந்த மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் நரம்பியல் நிபுணர் டாக்டர் கார்த்திகேயன் அவரைப் பரிசோதித்தார். சிகிச்சைக்கு வந்தவருக்கு பக்கவாதம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
நோயாளியின் மூளையை எம்ஆர்ஐ ஸ்கேன் மூலம் பார்த்தபோது மூளையின் வலது புறம் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமல் இருந்தது. மூளை ஆஞ்சியோகிராம் செய்தபோதும் இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தத்தை வழங்கும் வழி தடைப்பட்டிருந்தது.
நோயாளிக்கு என்ன ஆனது? மேற்கொண்டு செய்த சிகிச்சைக் குறித்து சென்னை ஓஎம்ஆர் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபேஷ் குமார் நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அவர்,”நோயாளிக்கு மூளை பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
பொதுவாக பக்கவாதத்திற்கு இந்தச் சிகிச்சை செய்யப்படுவதில்லை. மூளையின் சுவர் மென்மையாக இருக்கும் என்பதால் ரத்த ஓட்ட வழிகளில் சாதாரண தையல் போடுவது உகந்ததாக இருக்காது. தற்போதைய வளர்ச்சிகளின் மூலம் இந்த அறுவை சிகிச்சை சாத்தியமாகிறது. மேற்கண்ட நோயாளிக்கு அவசியமாகத் தேவைப்பட்டதால் மட்டுமே இந்த அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டது” என்றார்.
பக்கவாதம் வரக் காரணம்
அப்பல்லோ மருத்துவர் கார்த்திகேயன் பக்கவாதம் ஏற்படுவதற்கான காரணிகளை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதில் மன அழுத்தம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்வியல் மாற்றங்கள், ஆரோக்கியமில்லாத உணவு பழக்க வழக்கங்கள் மூளை தொடர்பான நோய்களுக்கு காரணமாக அமைகிறது.
12 முதல் 14 மணிநேரங்களுக்கு மேல் வேலை செய்யும் இளைஞர்களுக்கு முறையற்ற தூக்கம் பழக்கமாகிறது. மாறுபட்ட பணி நேரங்கள் உட்பட சிக்கலான வாழ்க்கை முறை பக்கவாதம் ஏற்பட முக்கிய காரணமாக அமைகிறது. தற்போது கரோனாவால் பணியிலிருக்கும் இளைஞர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது.
பெண்கள் நிலை அதைவிடவும் மோசம், அவர்கள் வீட்டையும் கவனித்துக் கொண்டு அலுவலக வேலைகளியும் நிர்வகிக்கிறார்கள். இந்தக் காலக் கட்ட இளைஞர்களின் ஃபாஸ்ட் புட் பழக்கம், புகைபிடித்தல், மது அருந்தும் பழக்கம் ஆகியவை நோய்க் காரணிகளாக உள்ளன. நோய் ஏற்படுவதில் மரபணு காரணிகளும் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
இளம் வயதினருக்கு பக்கவாதம் ஏற்படுகிறது எனில் அவர்களின் மூளை வேகமாக வீங்கும். ஆகவே அறிகுறிகள் தென்பட்ட 4 மணிநேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுவது அவசியம். ரத்த ஓட்டம் தடைபட ஆரம்பித்ததும் வேகமாக மூளை செல்கள் செயலிழக்கத் தொடங்கும்.
அதனால் அதிக எண்ணிக்கையில் மூளை செல்கள் செயலிழக்கும் என்பதால் பாதிப்பும் அதிகமாய் இருக்கும். பொன்னான நேரம் எனப்படும் அறிகுறிகள் தென்பட்ட 4 மணி நேரத்தில் மருத்துவரை அணுகுவது கட்டாயம்.