சென்னை: பெருங்குடல் புற்றுநோயால் (Colorectal Cancer) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில், அதிநவீன குறைந்தபட்ச ஊடுருவல் ரோபோடிக் அறுவை சிகிச்சை நுட்பங்களையும் தொழில்நுட்பத்தையும் வழங்கத் தொடங்கியது. கடந்த இருபது ஆண்டுகளாக 20 முதல் 40 வயது வரை உள்ள இளைஞர்களிடையே பெருங்குடல் புற்றுநோயின் விகிதம் அதிகரித்து வருகிறது.
பாதிப்பு விகிதம்: பெருங்குடல் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். அது மட்டுமல்லாமல், ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சை முறை, நோயாளிகள் கொலோஸ்டமி எனப்படும் பெருங்குடல் திறப்பு சிகிச்சையைத் தவிர்க்கவும், தொடர்ந்து சாதாரண வாழ்க்கை முறையை வாழவும் உதவுகிறது.
பெருங்குடல் புற்றுநோய் என்பது உலகளவில் பொதுவான புற்றுநோயாகும. ஆனால் புற்றுநோய் தொடர்பான மதிப்பீட்டு நிறுவனமான குளோப்கேன், 2018 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ஆய்வில், இந்தியா பெருங்குடல் புற்றுநோயில் 13 வது இடத்தில் உள்ளதாக கூறியது. 27,605 பேர் புதிதாக பாதிக்கப்பட்டதாகவும் 19,548 இறப்புகள் ஏற்பட்டதாகவும் புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு முதல் இந்தியா முழுவதும் 27,605 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் நோயுடன் வாழும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை சுமார் 53,700 என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை அப்போலோ மருத்துவமனையின் பெருங்குடல் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் முனிகிருஷ்ணன் கூறுகையில், “புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தாமதமாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. புற்றுநோயின் இந்த நிலை மாற்றத்தைத் தடுத்து முன்கூட்டியே சிகிச்சையளிப்பது எளிதானதாக இருக்கும்.
நன்மைகள் என்னென்ன? ஆரம்ப நிலைகளில் இருந்து, மூன்று மற்றும் நான்காவது நிலைகளுக்குச் சென்றால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிப்பது சவாலாக மாறும். இது குறித்து நோயாளிகளுக்கு விழிப்புணர்வு கல்வி கற்பிக்க வேண்டிய அவசர தேவை உள்ளது. அதனால் அவர்கள் தொடக்கத்திலேயே தகுந்த சிகிச்சை பெற முடியும்.
கடும் பாதிப்பை ஏற்படுத்தும் பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் அதிக பாதிப்பை ஏற்படுத்தாத மூல நோய் ஆகியவற்றின் அறிகுறிகள் ஆகியவை ஒரே மாதிரியாகவே இருக்கும். எனவே இது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசரத் தேவையாக உள்ளது. ரோபோடிக் பெருங்குடல் அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோய் கட்டியை அகற்றுவதற்கும், பெருங்குடலை மலக்குடலுடன் இணைப்புடன் மறுகட்டமைப்பதற்கும் சிக்கலான அறுவை சிகிச்சைகளை செய்ய முடியும்.
இதனால் நோயாளிகளுக்கு நிரந்தர பெருங்குடல் திறப்பு எனப்படும் கொலோஸ்டமியைத் தவிர்க்கலாம். ரோபோடிக் அறுவை சிகிச்சை குறுகிய காலத்தில் சிறந்த பலன்களை வழங்குகிறது. குறைவான இரத்த இழப்பு, விரைவாக குணம் அடைதல் மற்றும் இயல்பான உடல் செயல்பாட்டை சிறப்பாகப் பராமரித்தல் போன்ற பல நன்மைகளை கொண்டுள்ளது” என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசனவாய் தொடர்பான நோய்களுக்கு லேசர் முறையில் அறுவை சிகிச்சை - நெல்லையில் அறிமுகம்!