சென்னை: நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் சென்னை சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இன்று தொடங்கி வருகின்ற 18ஆம் தேதி வரை நடைபெறும். புத்தக கண்காட்சியில் மலேசியா, ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், அமெரிக்கா என 30க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த சர்வதேச புத்தக கண்காட்சியில் 66 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. புத்தக தொடக்க விழா நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவர் ஐ.லியோனி, பொதுநூலகத்துறை, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'வெளிநாட்டினரை அவரவர் மொழிகளிலேயே வருக வருக' என வரவேற்றார். மேலும், ’தமிழ் உலகில் பழையான மொழி. இம்மொழிக்காக திருவள்ளுவர், ஒளவையார் உள்ளிட்டப் பலர் புலவர்களாக இருந்துள்ளனர்.
திருவள்ளுவருக்கு பல இடங்களில் சிலை வைத்தவர், மறைந்த முதலமைச்சர் கருணாநிதி. மேலும் வரும் ஜனவரி 18ஆம் தேதி இந்த புத்தக கண்காட்சியின் நிறைவு விழாவிற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவுள்ளார்கள். முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படும். செஸ் ஒலிம்பியாட் போடி சிறப்பாக நடத்தியதைப் போன்று சர்வதேச புத்தக கண்காட்சியினையும் சிறப்பாக நடத்துவோம். வரும் காலங்களில் மேலும் அதிக நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்பார்கள்’ என்றார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, 'இந்த புத்தக கண்காட்சியில் ஜப்பான், மலேசியா போன்ற பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு நாடுகளிலிருந்து அவர்களின் நாட்டில் பிரபலமான நூல்களைக் கொண்டு வந்துள்ளார்கள். நேரில் பங்கேற்க இயலாத வெளிநாட்டு எழுத்தாளர்கள், காணொலி மூலம் உரையாடும் நிகழ்வுகளும் உள்ளன. ஒவ்வொரு அரங்கிலும் அவர்கள் மொழி, நாட்டின் கொடி உள்ளது.
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்லத் திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி நடக்க இருக்கிறது. எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர். மூன்று நாட்களில் வெளிநாட்டில் இருப்பவர்கள் வீடியோ கான்ஃபெரன்சிங் மூலமாக கூட இணையலாம்.
30 முதல் 50 புத்தகங்கள் வெளி நாட்டு மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கத் திட்டமிட்டுள்ளோம். அதே மற்ற நாடுகளைச் சார்ந்த நூல்களையும் தமிழ் மொழிக்கு மொழி பெயர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தமிழ்நாடு பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும்' எனக் கூறினார்.
மேலும், 'இது விற்பனைக்கான இடமல்ல. நம் நூல்களை அவர்களும் அவர்களின் நூல்களை நாமும் அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 100 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்த்து மையப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு அறிவிக்கவில்லை' என்றார்.
இதையும் படிங்க:திருச்சி ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்