சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அரசு அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்சம் மற்றும் பரிசு பொருட்கள் பெறுவதை தடுக்க வருடந்தோறும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்துவது வழக்கம். அதே போல வருகிற 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி நேற்று(அக்-14) லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மாவட்ட ஆய்வுகுழு அதிகாரிகளுடன் இணைந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
குறிப்பாக பத்திர பதிவுத்துறை, ஊரக வளர்ச்சித் துறை தொழில்துறை, வட்டாரப் போக்குவரத்து துறை, தீயணைப்புத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மதுவிலக்கு அமலாக்கத்துறை உட்பட 16 துறைகளை சேர்ந்த 46 அலுவலகங்களில் சோதனையானது நடத்தப்பட்டது. இந்த சோதனையின் முடிவில் அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டப்படாத 1 கோடியே 12 லட்சத்து 57 ஆயிரத்து 803 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
அதிகப்படியாக திருவாரூர் கோட்ட பொறியாளர் நெடுஞ்சாலை விருந்தினர் விடுதியில் இருந்து மட்டும் கணக்கில் காட்டப்படாத 75 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். அதே போல நாமக்கல்லில் நெடுஞ்சாலை உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து 8 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:போக்சோ வழக்கில் ஜாமீன்கோரிய லிங்காயத் மடாதிபதி; கர்நாடக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு