கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றானது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவத் தொடங்கிய இந்த வகை வைரஸானது உலகம் முழுவதும் தற்போது வரை 4,700க்கும் மேற்பட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது.
இதற்கிடையே, இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமடைந்து வருகிறது. வைரஸ் பாதிப்பைக் குறைக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். விமான நிலையங்களில் பயணிகளை கண்காணிப்பது, காய்ச்சல் அறிகுறியுடன் வரும் நோயாளிகளை சிறப்பு கவனம் செலுத்தி கண்காணிப்பது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது என்று வேலைகள் நடந்து வருகிறது.
இந்நிலையில், தலைமை செயலக வளாகத்தின் அனைத்து பகுதிகளிலும் இன்று மருந்து தெளிக்கப்பட்டது. அனைத்து அறைகளும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.