சென்னை:( Ilakkiya Mamani Award) இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருவதைப் போல், தமிழ் எழுத்தாளர்களுக்கு இலக்கியமாமணி விருது வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து இருந்தது.
இந்நிலையில் தகுதியானவர்களைத் தேர்வு செய்ய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
இது தொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை மானிய கோரிக்கை விவாதத்தின் போது., 'தமிழ் எழுத்தாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இலக்கியமாமணி விருதுகள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
5 பேர்கொண்ட குழுவில் இருப்பவர்கள் யார்?
அதை செயல்படுத்தும் வகையில் சிறந்த எழுத்தாளர்களை தேர்வு செய்ய தொழிற்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தேர்வுக்குழுத் தலைவராகவும், உறுப்பினர் செயலாளராக தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநரும், உறுப்பினர்களாக முனைவர் ராஜேந்திரன், முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், முன்னாள் பல்கலைக்கழக முதல்வர் சாரதா நம்பி ஆருரான் உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.
ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு
இதில் தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் 3 பேருக்குப் பாராட்டுப் பத்திரம் மற்றும் ₹5 லட்சம் ரொக்கம் வழங்கப்படும், ஒரு சவரன் தங்கம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விருது பெற சென்னை வருபவர்களுக்கு உணவு , தங்குமிடம் உள்ளிட்ட செலவிற்காக ₹70,000 வழங்கப்படும். இதற்காக தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நிதி ஒதுக்கீடு செய்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று விருது வழங்கப்படும் என அரசுக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: Verdict: 9 ஆண்டுகள் கழித்து வளர்ப்பு நாய்க்கு கிடைத்த நீதி!