கரோனா பரவல் காரணமாக வழக்கமாக நடைபெற வேண்டிய மருத்துவத் தேர்வுகள் நடப்பாண்டில் திட்டமிட்டபடி நடத்தப்படவில்லை. தற்போது நோய்ப் பரவல் சற்று குறைந்துள்ளதாலும், மாணவர்களின் நலன் கருதியும் தேர்வுகளை நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் கூறுகையில், "கரோனா தொற்றால் நடப்பாண்டில் சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டது. மாணவர்கள் நலன் பாதிக்காத வகையில் வேறு தேதிகள் அறிவிக்கப்பட்டு படிப்படியாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதன்படி, டி.எம்., எம்.சி.ஹெச்., ஆகிய உயர் சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இறுதி ஆண்டு தேர்வுகளும், எம்டி, எம்எஸ், முதுநிலை மருத்துவப் பட்டயப் படிப்புகளுக்கான தேர்வுகளும் நவம்பர் 4ஆம் தேதி தொடங்கப்படும். எம்டி,எம்எஸ் தேர்வுகளைப் பொறுத்தவரை ஏற்கனவே கடந்த செப்டம்பர் மாதத்தில் நடைபெற்றன. கரோனா பணியில் ஈடுபட்டிருந்த மருத்துவ மாணவர்கள் சிலர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு தேர்வு எழுத முடியாமல் இருந்தனர். அவர்களுக்கும் இம்முறை தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்படும்.
எம்பிபிஎஸ், முதுநிலை பல் மருத்துவப் படிப்பான எம்டிஎஸ், முதுநிலை ஆயுஷ் படிப்புகள் ஆகியவற்றுக்கான தேர்வுகள் நவம்பர் 23ஆம் தேதி தொடங்கவுள்ளது. பிடிஎஸ் இறுதியாண்டு தேர்வுகள் நவம்பர் 24ஆம் தேதி முதல் நடைபெறும். இளநிலை ஆயுஷ் படிப்புகளுக்கு டிசம்பர் 1ஆம் தேதி தேர்வுகள் தொடங்கும். எம்எஸ்சி நர்சிங் படிப்பிற்கு டிசம்பர் 21ஆம் தேதியும், பிஎஸ்சி நர்சிங் டிசம்பர் 14ஆம் தேதி ஆரம்பிக்கப்படும்.
போஸ்ட் பேசிக் பிஎஸ்சி நர்சிங் தேர்வும், பி.பார்ம் இறுதித் தேர்வும் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தொடங்குகின்றன. அதேபோன்று பிபிடி, பிஓடி, இளநிலை மருத்துவம் சார் படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 7 ஆம் தேதியிலிருந்தும், எம்பிடி,எம்ஓடி ஆகிய முதுநிலைப் படிப்புகளுக்கான தேர்வுகள் நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்தும் நடைபெறும். பி பார்ம் எனப்படும் மருந்தியல் படிப்புகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 1ஆம் தேதியிலிருந்து தொடங்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்க - ராமதாஸ்