தமிழ்நாட்டின் 2022-23ஆம் ஆண்டிற்கான காகிதம் இல்லாத பட்ஜெட், இன்று(மார்ச் 18) சட்டப்பேரவையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னிலையில் தாக்கல் செய்யப்பட்டது.
பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த பட்ஜெட் தாக்கலில், சென்னையின் வளர்ச்சியை முன் நிறுத்தி சில அறிவிப்புகள் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியமான அறிவிப்புகளாக இரண்டு அறிவிப்புகளை சொல்லலாம்.
தரப்பளவு குறியீட்டை(FSI) உயர்த்த முடிவு
காகிதம் இல்லா பட்ஜெட் தாக்கலின் அறிவிப்பான "மெட்ரோ ரயில் தடங்கள், புறநகர் ரயில் தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புற வழிச்சாலைகள், வெளிவட்டச் சாலைகள் போன்ற போன்ற போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகர்ப்புற வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அப்பகுதியில் தற்போதுள்ள தரப்பளவு குறியீட்டை(FSI) உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் முன்னுரிமையின் அடிப்படையில் ஏற்படுத்தப்படும்'' என்ற அறிவிப்பு சென்னையில் பல தொழில் வளர்ச்சிகள் பெருக உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, இது நகரத்தின் உள்கட்டமைப்பை பலப்படுத்தவும் பெரிதும் பயன்படும் என நம்பலாம்.
வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்டச் சாலை
இதனுடன் சேர்த்து பட்ஜெட் தாக்கலில், மற்றொரு அறிவிப்பும் முக்கியமானதாகத் திகழ்கிறது. “மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை 62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின்(ORR) கிழக்குப் பகுதியில், 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சி பெருவழியாக மேம்படுத்தப்படும் இந்தப் பெருவழியை அடுத்துள்ள பகுதிகளில் குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்குப் பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலை பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலங்கள், மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள்(Plug and play) ஆகியவற்றை அமைத்திட திட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தப் பெருவழியில் தரப்பரப்பு குறியீடும் (FSI) உயர்த்தப்படும்” என்ற அறிவிப்பினால் சென்னையில் மற்றொரு மாபெரும் தொழிற்பூங்காக்களும், பல்வேறு தொழிற்சார்ந்த கட்டமைப்புகளும் வருவதற்கான பெரிய வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட காகிதமில்லாத பட்ஜெட் தாக்கலில் சென்னையின் வளர்ச்சிக்கு வித்திடும் அறிவிப்புகளில் இவ்விரண்டு அறிவிப்புகள் முக்கியமானவைகளாக பார்க்கப்படுகின்றன.
இதையும் படிங்க:தாலிக்கு தங்கம் திட்டம் மாற்றம் - தமிழ்நாடு பட்ஜெட் கூறுவது என்ன?