சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை கமலாலயத்தில் இன்று (ஜன.26) குடியரசு தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழ்நாடு அரசின் குடியரசு தின விழா அணிவகுப்பில் வேலுநாச்சியார், குயிலி, பாரதியார், வஉசி போன்ற தியாகிகளின் வரலாற்றை நினைவுபடுத்தும் வகையில் கொண்டு வரப்பட்ட ஊர்திகளை நான் வரவேற்கிறேன்.
வருத்தம் தெரிவித்த அண்ணாமலை
இந்த ஊர்திகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதிமுகவைப் பற்றி, மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசிய கருத்துகள் தவறுதலாக வந்துவிட்டது.
இதுகுறித்து இன்று (ஜன.26) காலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்தேன்.
அதிமுக, பாஜக வைத்துள்ள கூட்டணி இயற்கையான கூட்டணி. கடந்த மூன்று ஆண்டுகளாக இரு அவைகளிலும் பாஜக அரசு கொண்டுவந்த அனைத்து திட்டங்களுக்கும், அதிமுக உறுதுணையாக இருந்துள்ளது. இதனால் அதிமுகவுக்கு பாஜக கடமைப்பட்டுள்ளது' என்றார்.
இதையும் படிங்க: லாவண்யா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை வேண்டும்; ஓபிஎஸ்