சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் பொறியியல் படிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வரும் சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப் பிரிவுகளில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருந்து வருவதால், அந்த கல்லூரிகளிலிருந்து குறிப்பிட்ட பாடப்பிரிவுகள் நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் இன்று(மே.25) காலை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய 8 அரசு பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு முதல் தமிழ் வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் படிப்புகள் நீக்கப்படுவதாகவும், ஆரணி, விழுப்புரம் அரசு பொறியியல் கல்லூரிகளில் மெக்கானிக்கல் தமிழ் வழி படிப்பு நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்க வேண்டிய சூழலில், தமிழ் வழிப் படிப்புகள் நீக்கம் தவறான நடவடிக்கை என அரசியல் கட்சிகள் விமர்சித்திருந்தன.
இந்த நிலையில், தமிழ்வழி பொறியியல் படிப்புகள் நீக்கம் குறித்த அறிவிப்பு வாபஸ் பெறப்படுவதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "அண்ணா பல்கலைகழகத்தில் 16 உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிகல் படிப்புகள் உள்ளன. அவற்றில் ஒரு சில கல்லூரிகளில் 10-க்கும் குறைவாக மாணவர் சேர்க்கை இருந்த காரணத்தால் சிண்டிகேட் குழு அமைத்து பரிசீலனை செய்து, இந்த கல்லூரிகளில் தற்காலிகமாக மாணவர் சேர்க்கை நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டது. எந்த பாடத்தில் மாணவர் சேர்க்கை குறைவாக இருக்கிறது என்று பார்த்து, அதற்கு பதில் வேறு பொறியியல் பிரிவுகளை சேர்க்க யோசிக்கப்பட்டது. அதனை சிலர் தமிழ் வழிக் கல்வியை புறக்கணிப்பது போல் அமைச்சரிடம் புகார் அளித்துள்ளனர். தமிழ் வழி கல்வியை நிறுத்த வேண்டும் என்று இந்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை.
உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தல்படி 11 உறுப்பு கல்லூரிகளில் சிவில், மெக்கானிக்கல் பாடங்கள் நிறுத்தி வைக்கப்படுவதாக வெளியிடப்பட்ட ஆணை திரும்ப பெறப்படுகிறது. ஒரு சில கல்லூரிகளில் ஆர்ட்பிசியல் இன்டலீஜன்ஸ், கணினி அறிவியல் உள்ளிட்ட துறைகளில் ஆர்வம் காட்டப்படுவதால் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரித்துள்ளோம்.
தமிழ் வழியில் என்று இல்லாமல் பொதுவாகவே சிவில், மெக்கானிக்கல் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவுதான். ஏஐசிடிஇ அனைத்து பாட புத்தகங்களையும் தமிழில் மாற்ற நிதி அளித்துள்ளது. தமிழ் மட்டும் அல்ல 14 மொழிகளில் பொறியியல் பாடப் புத்தகங்கள் மாற்றப்படுகின்றன. பொறியியல் பாட புத்தகங்கள் சரியான அளவு தமிழில் மாற்றப்பட்ட பின்பு அனைத்து பொறியியல் பாடப் பிரிவுகளும் தமிழ் மொழியிலும் கொண்டு வரப்படும். கடந்த ஆண்டை விட பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் அதிகம் வந்துள்ளன" என்று கூறினார்.