தமிழ்நாட்டில் கரோனா நோய்த்தொற்று அச்சம் காரணமாக தனிமைப்படுத்தபட்டு கண்காணிப்பில் உள்ள நபர்களின் வீடுகள் மற்றும் அவர்கள் வசிக்கும் பகுதிகளை செயற்கைக்கோள் வரைபட உதவியுடன் அடையாளப்படுத்தி கண்காணிப்பது தொடர்பான பணிகளை அண்ணா பல்கலைக்கழக உதவியுடன் சுகாதாரத் துறை தொடங்கியுள்ளது.
புவி தகவல் அமைப்பு மூலம் இந்தப் பணிகளை தற்போது சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் தற்போதைய நிலையில் 900க்கும் அதிகமானோர் கரோனோ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் கரோனோ நோய்த் தொற்று மேலும் பரவாமல் தடுக்கவும், அதனைக் கண்காணிக்கவும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சுகாதாரத் துறை அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அதன்படி தற்போது நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் வீடு, வீட்டின் முகவரி, வீடுகள் அமைந்துள்ள தெரு உள்ளிட்டவற்றை செயற்கைக்கோள் வரைபட உதவியுடன் தனித்தனியாக அடையாளம் காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த புவி தகவல் மூலம் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர், அவர் வசிக்கின்ற பகுதி, அதனைச் சுற்றி எத்தனை வீடுகள், தெருக்கள் மற்றும் எவ்வளவு தொலைவிற்கு தனிமைப்படுத்துதல் மற்றும் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ளமுடியும்.
இதனால் நோய் பரவலை கட்டுப்படுத்துதல், கண்காணிப்பு பணிகளை எளிதாக மேற்கொள்ள இயலும். இதேபோல் அரசின் கண்காணிப்பில் அவரவர் வீடுகளில் 90 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அவர்கள் வசிக்கும் வீடுகள், பகுதிகள் உள்ளிட்டவற்றையும் அடையாளப்படுத்தி கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த முடியும். இதற்காக அண்ணா பல்கலைக்கழகத்தின் புவியியல் துறையின் உதவியை சுகாதாரத் துறை நாடியுள்ளது.
நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மற்றும் கண்காணிப்பில் உள்ளவர்களின் முகவரிகள் சுகாதாரத் துறையால் அண்ணா பல்கலைக்கழகத்திடம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தரவுகளை கொண்டு குறிப்பிட்ட நபர்களின் வீடு, வசிப்பிடம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் பணிகள் தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. புவியியல் தகவல் அமைப்பு முறை என்பது கணினி உதவியுடன் இடம் சார்ந்த தரவுகளைக் கையாளுகின்ற ஒரு முறை என்பது குறிப்பிடத்தக்கது.