தாய்லாந்திலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் கடத்திக் கொண்டுவரப்பட்ட வடஅமெரிக்கா, தாய்லாந்து, கம்போடியா, லாவோஸ் அடா்ந்த வனப்பகுதிகளில் வசிக்கும் மா்மோசெட் குரங்குகள், ஓணான்கள், பல்லிகள், மர அணில்கள், காட்டு அணில்கள் உள்ளிட்ட 27 உயிரினங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
வெளிநாடுகளில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள் கொண்டு வரப்படுவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளை சோதனை செய்தனர். அப்போது சென்னையைச் சேர்ந்த சுரேஷ்(35) என்பவரை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரது உடைமைகள் சோதனை செய்யப்பட்டது.
அதில் செல்லப்பிராணிகள் (பெட்அனிமல்கள்) என்று கூறி மா்மோசெட் குரங்குகள், ஓணான்கள், பல்லிகள், மரஅணில்கள், காட்டு அணில்கள் உள்ளிட்ட 27 உயிரினங்களை பிளாஸ்டிக் கூடைகளில் மறைத்து வைத்து கொண்டு வந்தது தெரியவந்தது. பின்னர் சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து வனக்குற்றப்பிரிவு போலீசிடம் ஒப்படைத்தனர்.
மேலும் சென்னை விமான நிலையத்தில் இந்த உயிரினங்களை சுரேஷிடமிருந்து வாங்கிச் செல்ல வந்த 2 பேரையும் கைது செய்துள்ளனர். இந்த விலங்குகள் மூலம் வெளிநாட்டு நோய் கிருமிகள், வைரஸ்கள் இந்தியாவில் பரவிவிடும் என்பதால் இந்த 27 விலங்குகளையும் நாளை அதிகாலை 1.30 மணிக்கு தாய்லாந்து செல்லும் விமானத்தில் திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளனா். அதற்கான செலவுகளை சுரேஷ் உள்ளிட்ட 3 பேரிடம் வசூலிக்க முடிவு செய்திருக்கின்றனர். இந்த உயிரினங்கள் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.