சென்னை பட்டாபிராம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். கரோனா பரவலுக்கு முன் ஒரு தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றிவந்த இவர், தொற்று காரணமாக பணியிழந்துள்ளார். பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்பு மற்றொரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அந்நிறுவனத்தில் காவல் துறையினர் வழங்கும் அடையாள சரிபார்ப்புச் சான்றிதழைப் பெற்றுவரும்படி தெரிவித்துள்ளனர்.
இதனால், காவல் துறையினரின் அறிவுறுத்தலின்படி இணையதளம் வாயிலாக ராஜேஷ், சரிபார்ப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துள்ளார். மூன்று படி நிலைகளைக் கொண்ட இந்த விண்ணப்பத்தில் சுய விவரங்களைப் பதிவேற்றிய அவர், இரண்டாம் நிலையான கட்டணம் 500 ரூபாயையும் செலுத்தியுள்ளார். ஆனால், மூன்றாவது நிலையான சான்றிதழ் வழங்குதல் மட்டும் மூன்று மாதங்களாக நிறைவடையாமல் இருந்துள்ளது.
இது தொடர்பாக காவல் நிலையத்திற்கும், காவல் ஆணையர் அலுவலகத்திற்கும் நேரடியாக வந்து பலமுறை தெரிவித்தும் ராஜேஷுக்குச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அவரது வங்கிக் கணக்கிலிருந்து 500 ரூபாய் கட்டணம் எடுப்பதில் சர்வர் கோளாறு ஏற்பட்டதால், சான்றிதழ் வழங்க தாமதமாகிறது எனக் காவல் துறையினர் தரப்பில் தெரிவித்ததாக ராஜேஷ் குற்றஞ்சாட்டினார்.
கரோனாவால் பொருளாதாரச் சிக்கலில் தவித்துவரும் நிலையில், தனக்கு வேலை கிடைத்தும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ராஜேஷ் தெரிவித்துள்ளார். இணையவழி மூலமாகச் சான்றிதழ்கள் பெறலாம் எனக் காவல் துறையினர் அறிவித்துள்ள நிலையில் மூன்று மாதங்களாக சர்வர் சிக்கலைச் சரிசெய்யாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: புல்லட் ரயிலுக்கு சுற்றுச்சூழல் அனுமதி!