சென்னை: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆறு ஆண்டுகளில் நிறைவு செய்து 7 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டிற்கான பொதுக்குழு கூட்டம் சென்னை ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் இன்று (ஆக.6) நடைபெற்றது. அமமுக தொடங்கியதிலிருந்து தலைவர் பதவி சசிகலாவிற்கு ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2021 ஆம் ஆண்டு சிறையில் இருந்து வந்த சசிகலா அதை ஏற்க மறுத்து விட்டார். சில ஆண்டுகள் காத்திருந்த டிடிவி தினகரன் நாடாளுமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இந்த நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோளிங்கர் கோபாலை தேர்வு செய்துள்ளனர்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓபிஎஸ் டிடிவி தினகரனுடன் கைகோர்த்தார். அப்போது அமமுகவின் தலைவர் பதவி ஓபிஎஸ்-க்கு வழங்கப்படலாம் என பேசப்பட்டது. ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிக்கு இன்னும் வழக்குகள் நிலுவையில் உள்ளது. அதற்காக ஓபிஎஸ் தொடர்ந்து போராடுவார் என டிடிவி தினகரன் தெரிவித்திருந்தார். மேலும் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில், பொதுச் செயலாளராக டிடிவி தினகரன், துணைத் தலைவராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்பழகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், "அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தொடங்கி ஆறு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. தலைவராக கோபாலும், பொதுச் செயலாளராக நானும், துணைத் தலைவராக அன்பழகன் ஆகியோர் பொதுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளோம். 2017 ஆம் ஆண்டு அதிமுகவிற்கும் உங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு கூறியதால் துரோக கூட்டத்தை எதிர்ப்பதற்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தோம்.
2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்றோம். பின்னர், நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் சிறு சறுக்கல்கள் இருந்தாலும் தொடர்ந்து ஜெயலலிதாவின் இயக்கத்தை மீட்டு எடுப்பதற்காக போராடிக் கொண்டிருக்கிறோம். தற்பொழுது, ஓபிஎஸ் நடத்திய கோடநாடு வழக்கை விரைவு படுத்த கோரிய ஆர்ப்பாட்டத்தில் நமது இயக்கமும் ஒன்றாக இணைந்தது.
தீய சக்தி திமுகவை நாம் ஆட்சி பொறுப்பில் அமர வைத்து விடக்கூடாது, அதற்காக நான் எந்த தியாகத்தையும் செய்வதற்கு தயாராக இருக்கிறேன். அதற்காக ஜெயலலிதாவின் தொண்டர்கள் ஓர் அணியில் திரள வேண்டும் என்று கூறினேன். ஆனால், காது இருந்தும் செவிடர்களாக இருந்தவர்கள், கண்ணிருந்தும் குருடர்களாக இருந்தவர்கள், வாய் இருந்தும் ஊமைகளாக இருந்தவர்கள் பண திமிரால் நம்மை வேண்டாம் என்றார்கள்.
இவர்களால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தார்கள். 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்ட இயக்கம் நமது இயக்கம். எடப்பாடி பழனிசாமி அணியில் இருக்கும் முன்னாள் அமைச்சர்களின் மீது வழக்குகள் அதிகமாக உள்ளது. இதனால், வெளியில் சண்டை போடுவது போல திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். முன்னாள் அமைச்சர் மீது இருக்கக்கூடிய ஊழல் பட்டியலை திமுக தயார் செய்து வைத்துள்ளது.
எடப்பாடி பழனிசாமிவுடன் உடன்பாடு ஏற்பட்டதால் திமுக நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? அல்லது எடப்பாடி பழனிசாமி அணியினரை கை வைத்தால் டிடிவி தினகரன் வளர்ந்து விடுவார் என நினைத்து நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதா? என தெரியவில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் எண்ணம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. தமிழ்நாட்டில் ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை ஒழித்துக் கட்டும் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார். அது நிச்சயம் நடக்காது.
ஜெயலலிதாவின் தொண்டர்களும், தமிழ்நாட்டு மக்களும் இருக்கின்ற வரை உங்களை எந்த கொம்பனாலும் ஒன்றும் செய்து விட முடியாது. பணத்தை கொடுத்து நிர்வாகிகளை அதிக மக்கள் தக்க வைக்க முடியாது. 1996 ஆம் ஆண்டு அதிமுக படுதோல்வியை சந்தித்தபோது 25 விழுக்காடு வாக்குகள் பெற்றிருந்தது. இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி எத்தனை விழுக்காடு வாக்குகளை வைத்துள்ளார். இரட்டை இலை சின்னத்தையும், கட்சியின் பெயரையும் எடப்பாடி பழனிசாமி அபகரித்து வைத்துள்ளார்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி தொகுதியில் அவர் வெற்றி அடைய வேண்டும் என்றால் பாமகவின் ஆதரவு தேவை. அதற்காக, 10.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்கி சரியாக நிறைவேற்றாமல் அவர்களையும் எடப்பாடி பழனிசாமி ஏமாற்றியுள்ளார். நாங்கள் டெல்லி தேசிய ஜனநாயக கூட்டணி தான் உள்ளோம். தமிழ்நாட்டில் இல்லை என அன்புமணி ராமதாஸ் கூறியிருந்தார். பாமக இல்லாமல் வட தமிழ்நாட்டில் எப்படி வெற்றி அடைய முடியும்? சி.வி.சண்முகத்தையும், முனுசாமியையும் வைத்து என்ன செய்வீர்கள்?
எங்களைக் கட்சியை விட்டு ஏற்றி விட்டீர்கள். நானும் ஓபிஎஸ்-ம் இணைந்தால் ஏன் உங்களுக்கு பதற்றம் ஏற்படுகிறது. நீங்கள் துரியோதர்களைப் போல உள்ளவர்கள். நாங்கள் பாண்டவர்கள் போல உள்ளவர்கள். இறுதியில் யுத்தத்தில் பாண்டவர்களாய் நாங்களே வெற்றி பெறுவோம். பொதுக்குழு உறுப்பினர்களை விலைக்கு வாங்கி வாங்கி, கட்சியை ஹைய் ஷேக் செய்துள்ளீர்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல் கட்சி கரைந்து கொண்டிருக்கிறது.
தேர்தலுக்கான கூட்டணி வேறு, கொள்கை வேறு. நாடாளுமன்றத் தேர்தல் பிரதமர் ஆனது. அதனால், ஒருவேளை திமுகவை விட்டு காங்கிரஸ் விலகும் பட்சத்தில் அவர்களுடன் கூட்டணி அமைப்பேன் என்றும் இல்லையென்றால் பாஜகவுடன் கூட்டணி அமைப்பேன் என்றும் அதுவும் இல்லை என்றால் தனித்துப் போட்டி என்ற நிலைப்பாட்டில் உள்ளோம். 1998ஆம் ஆண்டில் பாஜகவை கடுமையாக சாடிய திமுக 1999ஆம் ஆண்டில் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று மத்தியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் அனைத்தும் காங்கிரஸ் கூட்டணியில் திமுக இருந்த போது கொண்டுவரப்பட்டது.
கச்சத்தீவு, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் திமுக மத்தியில் கூட்டணியில் இருக்கும் பொழுது தான் வந்தது. மிஷாவில் சிட்டி பாபு உள்ளிட்ட அதிகமானோர் இறந்தனர். இதற்குப் பின்பு நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று கருணாநிதி கூறவில்லையா?. வரும் காலங்களில் தனித்து நிற்கக்கூடிய தில்லும், தைரியமும் எங்களுக்கு இருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கிறதா?, மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா?. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்த பொழுது யாராவது எடப்பாடி பழனிசாமி போன்ற தொப்பியை அணிந்து இருந்தால் அவர் திரும்பி வந்திருக்கவே மாட்டார்.
பழனிசாமியிடம் அடைக்கலம் ஆவோம் என்று யாராவது எதிர்பார்த்தால் அது இன்றைக்கல்ல, என்றைக்கும் நடக்காது. அது நமது ரத்தத்திலேயே இல்லை. இந்த டிடிவி தினகரன் துரோகத்தை வேர் அறுக்காமல் விடமாட்டான். ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை யார் மறந்தாலும், டிடிவி தினகரன் மறக்க மாட்டான். மன்னிக்க மாட்டேன். வழக்குகளில் இருந்து தப்பி கொள்வதற்காக திமுகவுடன் கைகோர்த்து சிலர் ஜெயலலிதாவின் தொண்டர்களை பிரித்து வைத்துள்ளனர். அவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.
அவர்களை அரசியல் ரீதியாக வீழ்த்தாமல் இந்த டிடிவி தினகரன் ஓயமாட்டான். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் இருக்கும் வரை துரோகத்தை வெல்ல விட மாட்டோம். அதேபோன்று தீய சக்தியான திமுகவை வீழ்த்துவதற்கு வியூகம் அமைத்துக் கொண்டிருக்கிறோம். அதில், நாங்கள் வெற்றி பெறுவோம். நீங்கள் எத்தனை மாநாடு நடத்தினாலும் அது கூட்டப்பட்ட கூட்டமாக தான் இருக்கும் என்பது தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும்" என கூறினார்.
இதையும் படிங்க: "உங்கள் சீனியராக கலந்து கொண்டுள்ளேன்" - சென்னை பல்கலை. பட்டமளிப்பு விழாவில் ஸ்டாலின் நெகிழ்ச்சி!