சென்னை: சென்னை அடுத்த மந்தைவெளி முதல் தெருவை சேர்ந்தவர் லோகநாதன். இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தென்சென்னை தெற்கு மாவட்டம், எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட செயலாளராக உள்ளார். இவரது மூன்றாவது மகன் ராமசந்திரன் (36)வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்ற ராமச்சந்திரன் இரவு நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தெரிகிறது. இதனால் பயந்துபோன பெற்றோர் மற்றும் உறவினர்கள் ராமச்சந்திரனை தேட ஆரம்பித்துள்ளனர்.
இதையும் படிங்க:12-ஆம் வகுப்பு விடைத்தாளில் குளறுபடி.. தேர்வு முடிவுகளில் சர்ச்சை!
செல்ஃபோன் மூலமும் ராமச்சந்திரனை தொடர்புகொள்ள முடியாமல் அவதிப்பட்ட பெற்றோர் கடைசியாக அடையார் திருவிக பாலம் அருகே ராமசந்திரனின் இருசக்கர வாகனம் மற்றும் பேக் இருப்பதை கண்டு பிடித்துள்ளனர். இதனை அடுத்து போலீஸார் மற்றும் தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், இன்று காலை அடையாற்றில் இருந்து ராமச்சந்திரனின் உடலை மீட்டுள்ளனர். தொடர்ந்து அவரின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அதிகாரிகள் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க:"முதல்வர் ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணம் தோல்வி" - ஈபிஎஸ் விமர்சனம்!
அப்போது அடையார் திருவிக பாலம் அருகே இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்துள்ளனர். அதில் ராமச்சந்திரன் அங்கு வருவதும் மொபைல் ஃபோனை கையில் எடுத்து அதில் இருக்கும் எண்களை அழித்து விட்டு ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டதும் பதிவாகியுள்ளது. மேலும் இது குறித்து பெற்றோரிடம் விசாரித்தபோது குடும்ப ரீதியாக சில பிரச்சனைகள் இருந்து வந்ததாகவும் இதனால் ராமச்சந்திரன் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், மன அழுத்தத்தின் காரணமாக ராமச்சந்திரன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:கன்னியாகுமரி விரைவு ரயிலை கவிழ்க்க சதி?... திருச்சி அருகே நடந்தது என்ன?