சென்னை: சேத்துப்பட்டு அரங்கநாதன் தெருவைச் சேர்ந்த முன்னாள் அம்பேத்கர் சமூக நலச்சங்கத் தலைவரான இளங்கோவன் (50), அதேபகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்குச் சீதா என்ற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.
நேற்றிரவு (அக்.25) இளங்கோவன் தனது நண்பரான ஜெயவேல் என்பவருடன் தனது டீக்கடை அருகில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மூன்று இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத ஆறு பேர் கொண்ட கும்பல் இளங்கோவனை பயங்கர ஆயுதங்களால் வெட்டி தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த இளங்கோவன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று (அக்.26) அவர் உயிரிழந்தார்.
இளங்கோவனைக் கொலை செய்த கும்பல் மீது சேத்துப்பட்டு காவல் துறையினர் கொலை வழக்கு உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், இளங்கோவனுக்கும், திமுக இளைஞரணி உறுப்பினர் சஞ்சய் பிரபுக்கும் முன்விரோதம் இருந்துவந்ததாகவும், அவர் கடந்த மாதம் 20ஆம் தேதி இளங்கோவன் டீக்கடைக்கு ஆயுதங்களுடன் சென்று அங்கிருந்தவர்களை மிரட்டியதும் தெரியவந்தது.
இக்கொலை வழக்கு தொடர்பாகக் காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் இரண்டு பேரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: பைனான்சியர் முகம் சிதைக்கப்பட்டு கொலை: போலீஸார் விசாரணை