சென்னை வில்லிவாக்கத்தை அடுத்த பாடி மேம்பாலம் அருகே தேவேந்திரன் என்பவர் மது போதையில், தனது இன்னோவா காரை ஓட்டி வந்துள்ளார்.
அப்போது, சத்யா நகர் அருகே தறிகெட்டு ஓடிய கார், சாலையோரம் இருந்த மின்மாற்றிக் கம்பத்தின் மீது மோதிவிட்டு, பின் அதே வேகத்தில் ஆதிலட்சுமி (50) என்ற பெண் மீது ஏற்றிவிட்டு குறுக்கு சாலையில் திரும்பியது.
அங்கு சாலையில் மோகன் (40) என்பவர் மீது மோதிவிட்டு, பின்னர் சரசா (65) என்ற மூதாட்டி மீது தேவேந்திரன் காரை ஏற்றியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே சரசா உயிரிழந்துவிட்ட நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மோகன் உயிரிழந்தார். மேலும், பலத்த காயமடைந்த ஆதிலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
இந்த விபத்து தொடர்பான நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள திருமங்கலம் போக்குவரத்துக் காவல் துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.