சென்னை: காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவரும், வாலாஜாபாஜ் ஒன்றிய கவுன்சிலருமான அளாவூர் நாகராஜ் (57) என்பவர் நேற்று (செப்.25) நள்ளிரவு சென்னையில் நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் பங்கேற்று விட்டு தனது ஆதரவாளர்களுடன் இரண்டு கார்களில் தாம்பரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தள்ளுவண்டிக் கடையில் இரவு உணவு சாப்பிடுவதற்கு சென்றுள்ளனர். இதில் நாகராஜ் சைவம் என்பதால் அருகில் இருந்த தள்ளுவண்டிக் கடையில் தனியாக சாப்பிட்டுக் கொண்டு இருந்தார். அப்போது அதே கடையில் சாப்பிட்ட அமரர் ஊர்தி ஓட்டுநர், வாகனத்தின் ஆக்சிலேட்டரை வேகமாக அழுத்திய நிலையில், கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாப்பிட்டு கொண்டிருந்த நாகராஜ் மீது வேகமாக மோதியது.
இதில் நாகராஜ் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் தனது நண்பர்களுடன் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றார். இதனைக் கண்ட நாகராஜின் ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை அனுமதித்தனர்.
அங்கு நாகராஜை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் கொலை நோக்கத்துடன் ஏற்படுத்தப்பட்டதா? அல்லது விபத்தா? என்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பிச் சென்ற நபர்களை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - தாம்பரம் ஆணையர் அறிவிப்பு!