சென்னை: 76-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இரண்டாவது முறையாக தேசிய கொடியை ஏற்றி உரையாற்றினார்.
பின்னர் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகள், உங்கள் தொகுதியில் முதல்வர் விருது, தகைசால் தமிழர் விருது, முதலமைச்சரின் நல் ஆளுமை விருது, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக மிகச்சிறந்த சேவை புரிந்தோருக்ககான விருதுகள் போன்ற பல விருதுகளை முதலமைச்சர் மு க ஸ்டாலின் வழங்கினார்.
இதில், தகைசால் தமிழர் விருதை கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவிற்கு வழங்கினார். இத்துடன் 10 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. இதனை பெற்றுக்கொண்ட நல்லக்கண்ணு, அரசாங்கம் அவருக்கு வழங்கிய பரிசு தொகையான 10 லட்ச ரூபாயுடன், தனது சொந்த பணமாக 5000 ரூபாயை சேர்த்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
பின்னர், டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் விருது, பாளையங்கோட்டை சவேரியர் ஆய்வு நிறுவனம் தூய சவேரியார் கல்லூரி முனைவர் ச.இஞ்ஞாசிமுத்துவிற்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து, துணிவு மற்றும் சாகச செயலுக்கான கல்பனா சாவ்லா விருது, நாகப்பட்டினம் கீழ்வேளூரை சேர்ந்த எழிலரசிக்கு வழங்கப்பட்டது.
மேலும், உங்கள் தொகுதியில் முதல்வர் விருது முதல்வரின் முகவரி துறையை சேர்ந்த பொது குறை தீர்வு மேற்பார்வை அலுவலர் மற்றும் துணை ஆட்சியர் எஸ். லட்சுமி பிரியாவிற்கு வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து சிறந்த நகராட்சிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது. அதில், முதல் பரிசு ஸ்ரீவில்லிபுத்தூர், இரண்டாம் பரிசு குடியாத்தம்,மூன்றாம் பரிசு தென்காசி பெற்றது.
சிறந்த பேரூராட்சிகளுக்கான பரிசுகளில், முதல் பரிசு கருங்குழி செங்கல்பட்டு மாவட்டம், இரண்டாம் பரிசு கன்னியாகுமரி (கன்னியாகுமரி மாவட்டம்), மூன்றாம் பரிசு சோழவந்தான் மதுரை மாவட்டம் பெற்றது.
முதலமைச்சரின் மாநில இளைஞர் விருதுகளை ஆண்கள் பிரிவில், விஜயகுமார் ராணிப்பேட்டை மாவட்டம், முகமது ஆசிக் நீலகிரி மாவட்டம், ஸ்ரீகாந்த் வேலூர் மாவட்டம் பெற்றனர். பின்னர் பெண்கள் பிரிவுக்கான விருதை ச. சிவரஞ்சனி நாகப்பட்டினம் மாவட்டம் பெற்றார்.