சென்னை: நாட்டில் உள்ள சில தடை செய்யப்பட்ட அமைப்புகள், சட்டவிரோதமாக ஹவாலா பணத்தை தீவிரவாத அமைப்புகளுக்கு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஏற்கனவே பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புடன் தொடர்புள்ள நிறுவனங்களை மையப்படுத்தி அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டது. அப்போது, அந்த நிறுவனங்கள் சுமார் 120 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி, பயங்கரவாத செயல்களுக்கு உதவும் வகையில், வங்கிகளில் செலுத்தியது தெரியவந்ததாக அமலாக்கத்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தொகை உள்நாட்டிலும், வளைகுடா நாடுகளிலும் திரட்டப்பட்டு ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், சென்னையில் இன்று(டிச.8) காலை முதல் விருகம்பாக்கம், ராயபுரம், மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஹவாலா பணப்பரிமாற்றம் தொடர்பாகவே இந்த சோதனையும் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது.
சென்னை - விருகம்பாக்கம் ஆழ்வார் திருநகரில் உள்ள சாதிக் பாட்ஷா நகர் 1ஆவது தெருவில் உள்ள ஷபியுல்லா மற்றும் அவரது சகோதரர்களான இனயத்துல்லா, ஷகீல் மற்றும் டெல்லியில் தொழில் செய்து வரும் மற்றொரு சகோதரரான நியமத்துல்லா ஆகியோருக்குச் சொந்தமான வீடு, கடை உள்ளிட்டப் பகுதிகளில் சோதனை நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் சோதனை நடந்து வருகிறது.
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து கணினி, மடிக்கணினி போன்ற சாதனங்களையும், விளையாட்டுப் பொருட்கள்- பிளாஸ்டிக் பொருட்களையும் வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் இவர்கள் ஹவாலா முறையில் பணப்பரிமாற்றம் செய்துள்ளார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
விருகம்பாக்கத்தைச் சேர்ந்த சகோதரர்கள் 4 பேரும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் உறுப்பினர்களாக இருந்துள்ளதாகவும், ஏற்கெனவே சில ஆண்டுகளுக்கு முன்பு ஹாங்காங்கில் ஹவாலா பணப்பரிமாற்றம் செய்தது தொடர்பாக இவர்களது வீட்டில் சிபிஐ சோதனை மேற்கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. சோதனைக்கு பின் முழு விவரங்கள் வெளியிடப்படும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சீல் வைக்கப்பட்ட புரதான கட்டடங்களின் சீல்களை அகற்ற அனுமதி - மாநில தகவல் ஆணையர்