சென்னை: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கால வரையற்ற போராட்டத்தை அறிவித்து உள்ளன. இந்நிலையில், அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன், அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அந்த அறிவிப்பில், "தமிழகத்துக்குள் தினசரி 2,800, ஆம்னி பேருந்துகள் மூலம் 3,600 சர்வீஸ்கள் நடைபெற்றுக் கொண்டுள்ளன. இதில், பெரும்பாலும் 80 சதவீத ஆம்னி பேருந்துகள் இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விழாக் காலங்களில் தேவைக்கு ஏற்றார்போல் அதிகமான சர்வீஸ் இயக்கப்படும்.
இதையும் படிங்க: கூடலூர் பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம்? கேமரா பொருத்தி கண்காணிப்பு..!
இந்த சூழ்நிலையில் அரசு கோரிக்கை வைத்தால், பயணிகளின் நலன் கருதி, இரவு நேரங்களில் மட்டுமே இயக்கப்படும் எங்களது ஆம்னி பேருந்துகளை, பகல் நேரங்களில் ஒரு நகரத்தில் இருந்து மற்றொரு நகரத்திற்கு பயணிகளை ஏற்றிச் செல்லத் தயாராக உள்ளோம்" என கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, ஜனவரி 9ஆம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்து இருந்தன. பொங்கல் பண்டிகை சமயத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்கள் பயணம் மேற்கொள்வதில் இடையூறை ஏற்படுத்தும் என கருதி, எனவே போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசித்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உடன் கடந்த ஜன. 5ஆம் தேதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை.. மழை நீரில் தத்தளிக்கும் சிறுவாடி கிராமம்!
தொழிற்சங்கங்களின் ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து நிதித்துறையுடன் ஆலோசித்துதான் முடிவு செய்ய முடியும் எனவும், அனைத்து கோரிக்கைகளையும் ஒரே நாளில் எட்டிவிட முடியாது எனவும், பேசி முடிவு எடுக்கப்படும் என பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
மேலும், நேற்று (ஜன.8) மீண்டும் தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை ஆணையம், தமிழ்நாடு போக்குவரத்து துறை, போக்குவரத்து தொழிற்சங்கங்கள் இடையிலான முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில், அரசின் பதிலில் திருப்தி ஏற்படாததால் திட்டமிட்டபடி ஜன.9ஆம் தேதியான இன்று முதல் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம் நடைபெறும் என தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
அதன்படி, இன்று (ஜன.9) தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அமைச்சர் அழைத்தால் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் எனவும் தொழிற்சங்கம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மாடுபிடி வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு; ஆன்லைன் விண்ணப்பம் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அறிக்கை..