சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக வி.கே. தஹில் ரமணி பதவியில் உள்ளார். இவர் 2018 ஆகஸ்ட் மாதம் நியமிக்கப்பட்டார். இவர், 2001 ஜூன் மாதம் மும்பை உயர் நீதிமன்றம் நீதிபதியாகவும், அதன் பின்னர் அந்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்துவந்தார்.
தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்துவரும் தஹில் ரமணியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரை செய்திருந்தது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டலை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது. இவர் கடந்த மே மாதம் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் இதற்கு முன்பு பஞ்சாப், ஹரியானா மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் பதவி வகித்துள்ளார்.
யார் இந்த ஏ.கே. மிட்டல்?
- 1958 செப்டம்பர் 30ஆம் தேதி சத்தீஸ்கர் மாநிலத்தில் பிறந்த இவர் இளங்கலை வணிகவியல் படிப்பை டெல்லியில் முடித்தார்.
- பின்னர், டெல்லி சட்டக்கல்லூரியில் 1980இல் சட்டப்படிப்பை முடித்து பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்தில் பணியாற்றினார்.
- சிவில் சர்வீஸ் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் நிபுணத்துவம் கொண்ட இவர் பஞ்சாப் உயர் நீதிமன்றத்தில் வருமானவரித் துறை சார்பாக ஆஜராகி வாதிட்டுள்ளார்.
- 2004ஆம் ஆண்டு பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட இவர், 2018 மே மாதம் பஞ்சாப்-ஹரியானா பொறுப்புத் தலைமை நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.
- பின்னர் கடந்த மே மாதம் மேகாலயா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
- 2020 செப்டம்பர் மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியத்தால் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.