நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் கரோனா தொற்றின் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதியில் இருந்து மத்திய, மாநில அரசுகள் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் நடுத்தர மக்கள் முதல் விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், ஏழை மக்கள் வரை பெரும்பாலானோர் பாதிப்படைந்துள்ளனர்.
இதுமட்டுமின்றி அனைத்து வகையான போக்குவரத்துகளும் முடக்கப்பட்டன. இதனால் ஆட்டோ ஓட்டுநர்கள், கார் ஓட்டுநர்கள் வருமானம் இன்றி பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு சில நிவாரண அறிவிப்புகளை அறிவித்து வழங்கிவருகிறது. இருந்தபோதிலும் அரசு வழங்கிய நிவாரணத் தொகையை ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள் போதுமானதாக இல்லை எனத் தெரிவிக்கின்றனர்.
மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து தரப்பு ஏழை எளிய மக்களுக்கும் சமூக ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், பெரும் நிறுவனங்கள், தொண்டு அமைப்புகள் போன்றவை அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் போன்ற அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றன.
இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் அலுவலர்கள் சார்பாக சென்னை விமான நிலையத்திற்கு வெளியில் ஆட்டோ ஓட்டும் 130 ஆட்டோ ஓட்டுநர்களுக்கும், நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கலந்துகொண்டு அவர்களுக்கு கரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வும், தகுந்த இடைவெளியை பின்பற்றுமாறும் முகக் கவசங்களை அணியவேண்டும் எனக்கூறி அத்தியாவசியப் பொருள்களை வழங்கினார்.
மேலும் சென்னை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள உள்ள திரிசூலம், பம்மல், பல்லாவரம் ஆகிய பகுதியில் கரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த சுமார் 2 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கயிருப்பதாகவும் விமான நிலைய அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இருளர் மக்களுக்கு நிவாரணம்: திருவள்ளூர் ஆட்சியர் வழங்கல்!