சென்னை : எம்ஜிஆர் 1972இல் அதிமுக கட்சியை தொடங்கி 1977இல் ஆட்சியை கைப்பற்றினார். அந்த அளவுக்கு தொண்டர்கள் பலம், மக்கள் செல்வாக்கு பெற்ற அதிமுக, பொன்விழா ஆண்டை கொண்டாடுகிறது.
எம்ஜிஆர்
மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் திரைப்படம் மூலம் தமிழ்நாட்டு மக்களின் நெஞ்சங்களில் இன்றும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார். எம்ஜிஆர், இலங்கையின் கண்டியில் பிறந்து, கேரளாவின் பாலக்காடு, தமிழ்நாட்டின் கும்பகோணம் என வளர்ந்து பர்மாவின் ரங்கூன் நகரில் நாடகங்களில் நடித்து கால் நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக இடைவிடாத போராட்டத்தின் மூலம் திரை உலகில் நாயகனாக இடம் பிடித்தவர்.
அண்ணாவின் தலைமையால் ஈர்க்கப்பட்டு எம்ஜிஆர் திராவிட அரசியலுக்குள் நுழைந்தார். இந்நிலையில், எம்.ஜி.ஆர் 1962இல் சட்டமன்ற மேலவை (எம்.எல்.சி) உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1967இல் சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார். 1969இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் என அடுத்தடுத்த அரசியல் உச்சங்களைத் தொட்டு வந்தார்.
கருணாநிதியை ஆதரித்த எம்ஜிஆர்
காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை ஆட்சி செய்த போது, தேசிய கட்சியை தமிழ்நாட்டிலிருந்து அகற்றி மாநில சுயாட்சியை நிறுவ வேண்டும் என்னும் வேட்கையில் திமுக உருவாகி ஆட்சியைப் கைப்பற்றியது. அண்ணா 1969இல் முதலமைச்சராக இருந்தபோது காலமானார்.
அப்போது திமுகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் போட்டி ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். தமது ஆதரவை நண்பரான கருணாநிதிக்கு வெளிப்படுத்தினார். அதனால் திமுக எனும் கட்சி கருணாநிதி வசமானது. திமுகவின் தலைவராக வாழ்நாள் முழுவதும் கருணாநிதியே இருந்தார்.
கசந்த நட்பு
ஆனால் எம்ஜிஆர், கருணாநிதியின் நட்பு அண்ணா மறைந்து 3 ஆண்டுகளிலேயே கசப்பை எதிர்கொண்டது. 1971 திமுக வெற்றிக்கு தான் மட்டுமே காரணம் என்று நினைத்தார் கருணாநிதி. இந்த வெற்றியில் எம்ஜிஆருக்கு பங்கு இருக்கிறது என்பதை அவர் ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் 1971 கலைஞர் ஆட்சியில் மதுவிலக்கு ரத்து செய்தார். அந்த ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாள் அன்று அவரது நினைவிடத்தில் எம்ஜிஆர் மது ஒழிப்பு உறுதிமொழி எடுத்தார்.
பொய்த்த கருணாநிதி கணக்கு..
இப்படியே இரு தலைவர்களுக்கு இடையே விரிசல் அதிகரித்தது. இதன் உச்சமாக திமுக தலைவர்களின் சொத்துகள் குறித்த விவகாரத்தில் பொருளாளர் பதவியில் இருந்து எம்.ஜி.ஆரை டிஸ்மிஸ் செய்தார் கருணாநிதி.
எம்.ஜி.ஆரை கணக்குப் போட்டுதான் தூக்கி அடித்தார் கருணாநிதி. ஆனால் 1972 ஆம் ஆண்டு எம்ஜிஆரை முதலமைச்சர் நாற்காலியில் காலம் அமரவைத்தது. எம்ஜிஆர் மறையும் வரை சுமார் 13 ஆண்டுகள் கருணாநிதியால் முதலமைச்சர் ஆகவே முடியவில்லை.
அதிமுக உருவாக்கம்
1972 இல் திமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர், அண்ணா திமுக எனும் கட்சியை தொடங்கி, தமது அதிமுக, அண்ணாவின் கொள்கைகளை பின்பற்றும் என்றார். தொடர்ந்து, லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த எம்ஜிஆர், ரசிகர்கள் மூலமாகவே அரசியலில் அமோகமான வெற்றியைப் பெற்றார்.
1973ஆம் ஆண்டு திண்டுக்கல் இடைத்தேர்தலில் தொடங்கிய அதிமுகவின் வெற்றி 1987இல் எம்.ஜி.ஆர் மறையும் வரை தொடர்ந்த ஒன்றாகத்தான் இருந்தது.
எம்.ஜி.ஆரைப் பொறுத்தவரை டெல்லியில் அரசாண்ட காங்கிரஸுடன் நெருக்கமான கூட்டணியை கொண்டிருந்தார்.
எம்ஜிஆர் பார்முலா
மக்களவை தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளைத் தருவதும், தமிழ்நாடு சட்டசபை தேர்தல்களில் அதிமுக அதிக இடங்களில் போட்டியிடுவதுமான பார்முலாவையும் பின்பற்றினார். தொண்டர்களின் மனநிலைக்கு ஏற்றவாறு செயல்பட்டார் எம்ஜிஆர்.
எம்.ஜி.ஆர். தமது அரசியல் வாரிசாக ஜெயலலிதாவை கட்சிக்குள் கொண்டு வந்து, கொள்கை பரப்புச் செயலாளர், மாநிலங்களவை எம்.பி. பதவி என முக்கியத்துவம் கொடுத்தார்.
ஒருகட்டத்தில் ஒரேடியாக எம்ஜிஆர் 10 அமைச்சர்களை டிஸ்மிஸ் செய்தும் பரபரப்பை கிளப்பினார். எம்ஜிஆர் உயிருடன் இருந்த போதே ஜெயலலிதாவுக்கு அதிமுகவில் சீனியர்களான நெடுஞ்செழியன், ஆர்.எம்.வீரப்பன், எஸ்.டி.எஸ். என பலரும் கடுமையாக எதிர்ப்பை காட்டித்தான் வந்தனர். அதனால்தான் எம்ஜிஆர் மறைந்த போது அதிமுக பிளவை சந்திக்க வேண்டிய கட்டாயம் வந்தது. எம்ஜிஆர் போட்ட கணக்குப்படியே காலம் கட்சியை ஜெயலலிதாவிடம் அதிமுகவை ஒப்படைத்தது.
ஜெயலலிதா என்னும் இரும்பு மங்கை
ஜெயலலிதா, தன்னை எதிர்த்து மல்லுக்கட்டிய அத்தனை சீனியர்களையும் தனக்கு கீழே கொண்டு வந்தார். அப்படியும் அந்த சீனியர்களின் குடைச்சல் ஓயவில்லை. எம்.ஜி.ஆருக்கு வலது, இடது என்றெல்லாம் பார்க்கவில்லை. கண்ணை மூடிக் கொண்டு அத்தனை சீனியர்களையும் பந்தாடிவிட்டார்.. கட்சியைவிட்டே துரத்திவிட்டார். ஜெயலலிதா எனும் ஒற்றைத் தலைமையின் கீழ் அண்ணா திமுக வந்தது. அந்த தலைமையின் கண்ணசைவுக்காக பெட்டிப் பாம்பாக அத்தனை நிர்வாகிகளும் அடங்கிக் கிடந்தனர்.
எம்ஜிஆரைப் போலவே தமது அமைச்சரவை சகாக்கள், கட்சி நிர்வாகிகளை தீவிர கண்காணிப்பில் வைத்திருந்தார். அவர் ஒரு இரும்பு மனுஷியாக இருந்தார். ஜெயலலிதா காலத்தில் அதிமுகவின் பலம் அசைக்க முடியாத கூடுதல் வலிமையைப் பெற்றது. ஜெயலலிதா அவ்வப்போது இந்துத்துவ சித்தாந்த ஆதரவாளராக காட்டிக் கொண்டு ஆடு கோழி வெட்ட தடை, கட்டாய மதமாற்ற தடை சட்டம் என கொண்டு வந்தார். ஆனால் இந்த தமிழ் நிலத்தில் அத்தகைய போக்கு கை கொடுக்காது என்பதை புரிந்து கொண்டதன் விளைவாக, பாஜகவை துணிச்சலாக எதிர்த்தார். ஜெயலலிதா காலத்தில் டெல்லி தலைவர்கள் போயஸ் கார்டன் கதவுகள் திறக்காதா என காத்திருந்த நிலையும் இருந்தது.
69 சதவீத இடஒதுக்கீடு சட்டம்
ஜெயலலிதா ஆட்சியில்தான் தமிழ்நாட்டின் சமூக நீதி மரபைக் காப்பாற்றும் வகையிலான 69 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டது.
கோட்பாட்டளவில் அதிமுக, திமுக இரண்டும் ஒன்றுதான்.
திமுகவில் திராவிட சித்தாந்தப் பேச்சு உரத்து கேட்கும். அதிமுகவில் அப்படியான ஒரு பேச்சு ஒப்புக்கு கூட இருக்காது. எம்.ஜி.ஆரைப் போலவே திமுகவுக்கு அரியாசனம் கிடைக்கவிடாமல் அடுத்தடுத்த தேர்தல் வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மரணம்
ஜெயலலிதா மறைந்த போது அதிமுக எனும் அரசியல் கட்சியை இந்தியாவின் 3ஆவது மிகப் பெரிய கட்சியாக உருவாக்கி வைத்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அவரது தோழியாக அறியப்படும் வி.கே. சசிகலா, பொதுச் செயலாளர் ஆனார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைசெல்ல நேர்ந்ததால் சசிகலா எடப்பாடி பழனிசாமியை முதல் அமைச்சர் ஆக்கினார். சசிகலாவின் உறவினர் என்பதால் தினகரனை அதிமுகவின் துணை பொதுச் செயலாளராக நியமித்தார்.
ஓபிஎஸ் தர்ம யுத்தம்
சசிகலா சிறை செல்ல நேர்ந்ததும் ஓ. பன்னீர் செல்வம் தர்ம யுத்தம் நடத்த, அதிமுக கட்சி பிரிய ஆரம்பித்தது. எடப்பாடி பழனிசாமி அணி, ஓபிஎஸ் அணி என பிரிந்து தங்களுக்குள் பனிப் போர் மூண்டது. பின்னர் சமரசப் பேச்சின் மூலம், அதிமுகவிற்கும் சசிகலா தினகரன் சம்பந்தம் இல்லை என்று பொதுக்குழு கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் நிரந்தர பொதுச் செயலாளராக ஜெயலலிதாவும், அதிமுக தலைமை இரட்டைத் தலைமைக்கு கொண்டு வரப்பட்டது. அதில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகினர். அதிமுகவின் முதல் தோல்வியாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கருதப்படுகிறது.
நாடாளுமன்றம், சட்டப் பேரவை, உள்ளாட்சி தோல்வி
இருந்தபோதிலும் இந்தத் தோல்வியை சுதாரித்துக் கொள்ளாமல், அதிமுகவின் இரட்டை தலைமை, சட்டப்பேரவை தேர்தலிலும் படுதோல்வி அடைந்தது. மேலும் தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளது.
தொண்டர்களுக்கான இயக்கமாக இருந்த அதிமுக தற்போது, எடப்பாடி கோஷ்டி, ஓபிஎஸ் கோஷ்டி என தொண்டர்கள் மத்தியில் குழப்பம் நிலவும் படியாக உள்ளது. இந்த இரட்டை தலைமை அதிமுக தொண்டர்களை அல்லாட வைத்துக் கொண்டிருக்கிறது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக இல்லை
மேலும் எந்த பாஜகவை துணிவுடன் ஜெயலலிதா எதிர்த்தாரோ அந்த பாஜகவை முதுகில் சுமந்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் இந்த இரண்டு தலைமைகளும் உள்ளனர். பாஜகவின் சரித்திரமே, ஒரு கட்சியுடன் கூட்டணி வைத்து அந்த கட்சியையே கபளீகரம் செய்வதுதான். அதைத்தான் புதுச்சேரியில் செய்து காட்டியது.
புதுச்சேரி வரலாற்றில் முதல் முறையாக சட்டசபையில் இடம்பெற முடியாத அளவுக்கு தோல்வியை சந்தித்துள்ளது அதிமுக. நியமன எம்.எல்.ஏக்களையும் பாஜக தனதாக்கிக் கொண்டது; மாநிலங்களவை எம்பி பதவியையும் தனதாக்கிக் கொண்டது பாஜக. இதனால் புதுச்சேரியில் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
அதிமுக தொண்டர்கள் அச்சம்
புதுச்சேரியில் கண்கூடாக நிகழ்ந்த அத்தகைய சூழ்நிலை தமிழ்நாட்டிலும் அதிமுகவுக்கு வருவதற்கு ரொம்ப காலமாகாது. ஆனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரான காட்சிகள் தலைகீழாக மாறி அதிமுகவின் கோலங்களும் 50 ஆண்டுகால நெடும் வரலாற்றை வேரோடும் வேரடி மண்ணோடும் வெட்டிச் சாய்த்துவிடுவார்களோ என்கிற பேரச்சத்தைத்தான் இது தருகிறது.
அதிமுகவிற்க்கு தேவை ஒற்றை தலைமை, தொண்டர்கள் விருப்பம் என மூத்த பத்திரிக்கையாளர் துரை கண்ணா தெரிவித்துள்ளார். இது குறித்துப் அவர், “தொண்டர்களுக்கான இயக்கமாக அதிமுக இருந்து வந்ததது. எம்ஜிஆர், ஜெயலலிதா, தொண்டர்களுக்காகவும் மக்கள் நலம் திட்டங்களுக்காக செயல்பட்டவர்கள். அதிமுக கட்சியில் ஆண்டுதோறும் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறும்.
தவறான முடிவுகள்
இதனால் தொண்டர்களின் மனக்குமுறல்கள், கட்சி நிர்வாகிகளையும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அதிகம் காணப்பட்டது. மேலும் இந்தக் கூட்டத்தில் உள்ளூர் பிரச்சினை முதல் உலகப் பிரச்சினை வரை ஆலோசித்து தீர்வு காணப்பட்டு வந்தது. மேலும் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின்னர் அதிமுகவின் இரட்டை தலைமை தொண்டர்களையும் மக்களையும் கண்டு கொள்ளவில்லை. வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு, பாஜகவுடன் கூட்டணி, இன்னும் பிற தவறான முடிவுகளால் அதிமுக இரட்டை தலைமைக்கு மூன்று முக்கிய தேர்தலில் தோல்வி கண்டுள்ளது” என்றார்.
சசிகலா ரீ-எண்ட்ரி
இதற்கிடையில், நேற்று (அக்.16) ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க வி.கே. சசிகலா அஞ்சலி செலுத்தினார். அப்போது, “ஜெயலலிதாவிடம் மனப்பாரத்தை இறக்கிவைத்துவிட்டேன், அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் உண்டு” என்றார். இதை, நல்ல நடிப்பு ஆஸ்கார் விருது கொடுக்கலாம் என்றெல்லாம் முன்னாள் அமைச்சரும், கட்சி மூத்த நிர்வாகியுமான ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
எது எப்படியோ, அதிமுக தலைவர்கள் தங்களுக்கு இடையேயான ஈகோக்களை விட்டுவிட்டு கட்சியை காப்பாற்ற ஒற்றை தலைமையை எவ்வளவு விரைவாக உருவாக்குவார்களோ அவ்வளவு அக்கட்சிக்கு நல்லது. பொன்விழா ஆண்டை கொண்டாடும் தருணத்திலாவது அதிமுகவின் மூத்த தலைவர்களும் தொண்டர்களும் இது குறித்த ஆரோக்கியமான விவாதங்களை முன்னெடுத்தலே இப்போதைய உடனடியான தேவை. நடுநிலை அரசியலை விரும்புவோர் அதிமுக எனும் கட்சி காக்கப்படவேண்டும் என்கிற கருத்தை முன் வைக்கின்றனர்.
ஆபத்தில் அதிமுக.. குழப்பத்தில் தொண்டர்கள்!
அதிமுக, திமுக இதில் எது ஓய்ந்தாலும் அந்த இடம் பாஜகவால் நிரப்பப்படும் என்பதால் திராவிட சித்தாந்தம் கொண்டவர்கள், தமிழ்நாட்டில் ஊழல் முறைகேடு என இரண்டுக்கட்சிகள் மீதும் குற்றச்சாட்டுகள் இருந்தாலும் வட மாநிலங்கள் போல் மதச்சண்டை, சாதாரண மக்களுக்கு எதிரான வன்முறை, கல்வி, மருத்துவம், பெண்கள் நிலையில் மோசமான நிலை தமிழ்நாட்டில் இல்லை. வடமாநிலங்களைவிட அனைத்திலும் ஒருபடி மேலாக தமிழ்நாடு உள்ளது.
இதற்கு திமுக, அதிமுக இரண்டுக்குமே பங்கிருப்பதை மறுக்க முடியாது என்பதால் அதிமுக பாதுகாக்கப்பட வேண்டும். அதிமுக தலைமையில் உள்ளவர்கள் அதன் பொறுப்புணர்ந்து நடக்கவேண்டும் என்பதே அரசியல் ஆர்வர்லர்கள் எதிர்ப்பார்ப்பு, அதிமுக தொண்டர்களின் எண்ணமும் அதுவே,
அதிமுகவில் வலிமையான ஒற்றை தலைமை இல்லாத வரை புதுச்சேரியில் நடைபெற்றது போல் அரங்கேறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
இதையும் படிங்க : 'அதிமுகவுக்கு இனி எதிர்காலம் இல்லை' - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ஆர்