டெல்லியில் போராடி வரும் விவசாயிகள், இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகள், வணிகர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சிகள் பங்கேற்கும் ஒருங்கிணைத்த போராட்டம் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்ட அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், "மத்திய அரசு குறைந்தபட்ச ஆதார விலையை முடக்க நினைக்கிறது. நாட்டில் 80 விழுக்காடு மக்கள் விவசாயத்தை நம்பியிருக்கும் நிலையில், மத்திய அரசு அவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க நினைக்கிறது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “8 வழிச் சாலைக்கு மத்திய அரசுடன் சேர்ந்து விவசாயிகளுக்கு எதிராக செயல்பட்ட முதலலைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உச்ச நீதிமன்றம் நெத்தியடி தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தமிழ்நாடு அரசுக்கு விவசாயிகள் நலன் மீது அக்கறை இருந்தால் 8 வழி சாலை திட்டத்தையும், வேளாண் சட்டங்களுக்கு வழங்கிய ஆதரவையும் திரும்ப பெற வேண்டும்.
பாஜகவின் அமைச்சரவையில் இருந்த கட்சிகள் கூட இந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளனர். பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக வெளியேறாவிட்டால் தமிழ்நாடு விவசாயிகள் உங்களை மன்னிக்க மாட்டார்கள்” என்றார்.
இதையும் படிங்க: 'பயிர் காப்பீடு செய்ய நவம்பர் 31 வரை அனுமதி வழங்க வேண்டும்' - பி.ஆர். பாண்டியன்