சென்னை: அதிமுகவில் ஒற்றைத்தலைமை விவகாரம் சூடு பிடித்த நிலையில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னை வானகரத்தில் கூடியது. அந்நேரம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அதிமுக அலுவலகத்திற்கு வருகை தந்தனர். அப்போது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
பின்னர் இது கலவரமாகவும் மாறியது. இந்தக் கலவரம் தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் தனித்தனியாக புகார் அளித்தனர். இவ்வாறு பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பின்னர் இவ்வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.
இதனையடுத்து சிபிசிஐடி காவல்துறையினர், கடந்த 7 ஆம் தேதி அதிமுக அலுவலகத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். கலவரத்தின்போது காவல்துறையினரால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை சிபிசிஐடி காவல்துறையினர் கைப்பற்றினர்.
மேலும் அலுவலகத்தில் என்னென்ன பொருட்கள் திருடப்பட்டது, சேதப்படுத்தப்பட்டது குறித்து ஆய்வு செய்ய கைரேகை நிபுணர்கள் மற்றும் தடயவியல் துறை ஆய்வாளர்களும் ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்தை சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கம், தனது வழக்கறிஞர்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு டிஎஸ்பி வெங்கடேசன் முன்னிலையில் மகாலிங்கம் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதையும் படிங்க: அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட வழக்கில் சிசிடிவி பதிவுகள் சேகரிப்பு - சிபிசிஐடி பதில்