அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு மறைந்த நிலையில், 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது. இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டன.
தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்ற முந்தைய சட்ட விதியில் திருத்தம் செய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை இனி கட்சியின் அடிப்படை உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள் என மாற்றப்பட்டது.
தொடர்ந்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான தேர்தல் கடந்த டிசம்பர் 7ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலை ரத்துசெய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் கே.சி. பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தேர்தலில் தலையிட நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு இன்று (ஜனவரி 7) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்புகிறீர்களா? என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு வழக்கைத் தொடர்ந்து நடத்த இருப்பதாக மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் தியாகேஸ்வரன் தெரிவித்தார்.
அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் விஜய் நாராயண், அரவிந்த் பாண்டியன் ஆகியோர் தேர்தலை எதிர்த்து கே.சி. பழனிசாமி தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி அதிமுக சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
அதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கு விசாரணையை பிப்ரவரி 8ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: திட்டமிட்டப்படி டிஎன்பிஎஸ்சி தேர்வு