தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எஸ். செம்மலை, ஓபிஎஸ் ஆதரவு எம்எல்ஏக்கள் உள்ளிட்ட 11 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டி திமுக தரப்பு தொடர்ந்த மனுவில் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் பதில் வேண்டும் என்று கோரிய வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்.ஏ. போப்டே, 11 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்வது தொடர்பாகச் சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் என்ற வாதத்தை ஏற்று வழக்கை முடித்துவைத்தார்.
முன்னதாக, இந்த வழக்கு கடந்த நான்காம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், 11 அதிமுக எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று அளிக்கப்பட்ட மனுவின் மீது சபாநாயகர் இதுவரை முடிவு ஏதும் எடுக்கவில்லை எனவும் திமுக தரப்பு மனு மீது சபாநாயகர் எடுத்த நடவடிக்கை என்ன என்று விளக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
மேலும் அவர், "அட்டவணை 10இன்படி சபாநாயகர் உடனே மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி அளிக்கப்படுகிற தீர்மானங்கள், கோரிக்கைகள் மீது 3 மாதங்களுக்கு மேலாக கண்டுகொள்ளாமல் இருப்பது அளிக்கப்பட்டுள்ள காலக்கெடுவை மீறுகின்ற செயல். இது தொடர்பாக மணிப்பூர் மாநில சபாநாயகருக்கு நீதியரசர் நாரிமன் அண்மையில் வழங்கிய உத்தரவினை கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று வாதிட்டார்.
ஆனால், பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோத்தகியோ கபில் சிபலின் வாதத்தை ஏற்க முடியாது என்று இடைமறித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வாதங்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளீர்கள் என்று அரசு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார்.
மேலும், மூன்று வருடங்களாக ஒரு மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது எப்படி நியாயம் ஆகும் என்று கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, மூன்று ஆண்டுகளாக இந்த மனு மீது ஏன் நடவடிக்கை இல்லை என்று பிப்ரவரி 14ஆம் தேதி ஆளுநர் தரப்பு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டு டிசம்பரில் இறந்த பின்னர், 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ஓபிஎஸ் உள்பட 11 அதிமுக எம்எல்ஏக்கள் கொறடா உத்தரவை மீறி அரசுக்கு எதிராக வாக்களித்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.