காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது குறித்து கருத்துத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்தத் தலைவரும், எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரைமுருகன், காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும், தன் அரசும் நிலைத்தால் போதும் என்று முதலமைச்சர் செயல்படுவதாக விமர்சித்திருந்தார்.
தற்போது துரைமுருகனின் இந்த அறிக்கையைக் கண்டித்து விளக்கம் அளித்துள்ள மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறி இருப்பதாவது :
'விவசாயப் பெருங்குடி மக்களின் வாழ்வில் ஒளிபெற, ஏராளமான நீர் மேலாண்மைத் திட்டங்களையும், டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாகவும் அறிவித்து சாதனை படைத்தது தமிழ்நாடு அரசு. இதனை பொறுத்துக் கொள்ள முடியாத திமுக, தனது வழக்கமான பாணியில் மக்களை ஏமாற்றி, வீண் விளம்பரம் தேடும் முயற்சிகளில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உரிமை பறிக்கப்படுகிறது என்ற தவறான தகவலைப் பரப்பி வருகிறது. இது ஒன்றும் புதிதல்ல.
காவிரி நதி நீர் பிரச்னைகளில், தமிழ்நாடு அரசின் சாதனைகளையும், திமுகவின் துரோகங்களையும் தமிழ்நாடு மக்கள் நன்கு அறிவார்கள். காவிரி மேலாண்மை வாரியம், அம்மாவின் அரசு எடுத்த உறுதியான சட்டப் போராட்டங்களினால் தான் அமையப் பெற்றது என்பதை நாடே அறியும். திமுகவின் சாதனைகள் எல்லாம் காவிரியின் உபநதிகளான கபினி, ஹேமாவதி மற்றும் ஹாரங்கி குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்டுவதை வேடிக்கைப் பார்த்து, தமிழ்நாட்டின் உரிமைகளை தாரை வார்த்தது மட்டும் தான்.
காவிரி நடுவர் மன்றம் அதன் இறுதி ஆணையினை 5.02.2007 அன்று பிறப்பித்தது. அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசும் திமுக அங்கம் வகித்த மத்திய அரசும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு சிறு துரும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2011ஆம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்த பின் நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு எடுத்த தொடர் சட்டப் போராட்டங்களினால்தான் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை 19.02.2013 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க சாதனையாகும்.
இதன்பின் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சிவில் முறையீட்டு மனுக்களை விரைவில் விசாரித்து ஆணை வழங்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எடுத்த நடவடிக்கைகளாலும், அதன்பின் அம்மா வழியில் செயல்பட்டு வரும் அஇஅதிமுக அரசு எடுத்த நடவடிக்கைகளாலும் இம்மனுக்களில் 16.02.2018 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க இறுதித் தீர்ப்பு பெறப்பட்டது. இத்தீர்ப்பில் இந்த இறுதி ஆணையை செயல்படுத்த ஒரு திட்டத்தை வகுக்கவும் ஆணையிட்டது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு எடுத்த உறுதியான நடவடிக்கைகளால் தான் 01.06.2018 அன்று உச்ச நீதிமன்ற ஆணையின்படி, காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நீர்முறைப்படுத்தும் குழு ஆகிய இரண்டு அமைப்புகள் அமைக்கப்பட்டு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது. இது தமிழ்நாடு வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்.
மத்திய அரசு 24.04.2020 அன்று வெளியிட்ட அரசிதழில் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் பொருண்மைகளில் (Subjects) மத்திய அரசு அலுவலக விதிகளின் படி (Business Rules) சேர்த்து அறிவித்துள்ளது. இது வழக்கமான நிர்வாக நடைமுறைக்கான நடவடிக்கை என்பதை சம்பந்தப்பட்ட மத்திய நீர் வளத் துறை ஆதார உயர் அலுவலர்கள், சட்ட வல்லுநர்கள் தெரிவித்த விவரங்களின் அடிப்படையில் ஒரு விளக்க அறிக்கையை 29.04.2020 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டது.
இருப்பினும், எதிர்கட்சித் துணைத் தலைவர் திரு. துரைமுருகன் அவர்கள், தனக்கு எல்லாம் தெரியும் என்ற தோரணையில், உண்மை நிலை அறிந்தும் அரசியல் ஆதாயத்திற்காக மக்களை திசை திருப்ப ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது விந்தையாக இருக்கிறது. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தும், காவிரிப் பிரச்னையில் தமிழ்நாட்டின் நீர் பங்கினை பெறத் தவறியதையும், அம்மாவின் அரசு தன் கடும் முயற்சிகளால் பெற்று தந்த வரலாற்று சிறப்புமிக்க சாதனையையும் நாடே அறியும்.
ஒரு பிரபல ஆங்கில நாளேட்டில் 30.04.2020 அன்று மத்திய ஜல் சக்தித் துறை செயலாளர் திரு. யு. பி. சிங் அவர்கள், இது வழக்கமான அலுவலக நடைமுறையே என்றும்; இதனால் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்பதையும் தெளிவுபட குறிப்பிட்டிருந்ததை திரு. துரைமுருகன் அவர்கள் புரியாதது போல கபட நாடகம் ஆடுகிறாரா?
மத்திய நீர்வள ஆதாரம் நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகத்தின் பெயரை 'ஜல் சக்தி அமைச்சகம்' என 2019 மே மாதத்தில் மத்திய அரசு பெயர் மாற்றம் செய்தது. இதனையடுத்து மத்திய அரசு ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கீடு செய்துள்ள பொருண்மைகள் (Subjects) குறித்த விதிகளுக்கு திருத்தங்களை, தற்போது மேற்கொண்டுள்ளது. இதில் ஜல் சக்தி அமைச்சகம் கையாளக்கூடிய பல பொருண்மைகளும் கொண்டு வரப்பட்டுள்ளன. இதில் கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் அடங்கும் என்று மத்தியஅரசு 24.04.2020 அன்று அதன் அரசிதழில் அறிவித்துள்ளது.
01.06.2018இல் காவிரி மேலாண்மை ஆணையத்தை அரசிதழில் வெளியிட்டதும் அந்த ஆணையத்தினுடைய அதிகாரங்கள் மற்றும் பணிகளை உச்ச நீதிமன்ற ஆணையின்படி வரையறுத்ததும், அப்போதைய மத்திய நீர் வள ஆதாரம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புனரமைப்பு அமைச்சகமே ஆகும்.
மத்திய அரசின் கீழ் இயங்கும், அமைச்சகங்கள் கையாளக்கூடிய பொருண்மைகள் குறித்து விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சேர்க்கப்பட்டுள்ள காவிரி நதி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர்கள், உறுப்பினர் செயலர், காவிரி நீர் முறைப்படுத்தும் குழுத் தலைவர் போன்றவர்களை நியமித்தல், அவர்களின் சம்பளம் நிர்ணயம் செய்தல் போன்ற பணிகள் மட்டுமே ஜல் சக்தி அமைச்சகத்தால் மேற்கொள்ளப்படும். எனவே, காவிரி மேலாண்மை ஆணையத்தின் தன்னாட்சிப் பணிகளில் ஜல் சக்தி அமைச்சகம் தலையிடுவதற்கு வாய்ப்பில்லை.
தமிழ்நாட்டின் சார்பாக காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்களும் இதே கருத்தினை தெரிவித்துள்ளார்கள். வழக்கறிஞர்கள் அளித்த கருத்தில் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் என்றும்; அதன் நடவடிக்கைகளில் மத்திய அரசு குறுக்கிட இயலாது என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி தெரிவித்துள்ளார்கள்.
காவிரி நதி நீரை நம்பியிருக்கும் விவசாயிகளின் நலனுக்காக அம்மாவின் அரசு எடுத்துவரும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை தாங்கிக் கொள்ள முடியாத திமுக தலைவர் திரு. மு. க. ஸ்டாலின், முன்னாள் அமைச்சர் திரு. துரைமுருகன் இருவரும் தேவையற்றக் குழப்பத்தை ஏற்படுத்தி, தங்களது சுயநலனுக்காக அரசியல் ஆதாயத்தைத் தேட முயற்சிப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் தலைமையிலான அம்மாவின் அரசு விவசாயிகளின் நலன்களையும், தமிழ் நாட்டின் உரிமைகளையும் தொடர்ந்து பாதுகாத்து வருவதில் எப்பொழுதும் உறுதியாக இருந்து வருவதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள்' என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: காவிரி விவகாரம்: மத்திய அரசிற்கு பி.ஆர். பாண்டியன் கண்டனம்!