டெல்லி: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி என இரண்டாக அதிமுக பிளவுபட்டது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் அதிமுக இடைக்காலம் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், ஜேசிடி பிரபாகரன் உள்ளிடோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜூலை மாதம் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ரத்து செய்து தீர்ப்பு வெளியிட்டார்.
தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு, உயர் நீதிமன்றத்தில் முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
நிலுவையில் இருந்த இந்த வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதனிடையே ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை கட்சியின் அவைத்தலைவர் தலைமையில் கூட்டப்படும் பொதுக்குழுவில் தேர்தெடுக்க வேண்டும் என்றனர்.
மேலும் இந்த பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர். அதிமுகவின் 99 விழுக்காடு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் தென்னரசுக்கு இருப்பதாக அவைத் தலைவர் தமிழ் உசேன் தேர்தல் ஆணையத்தில் ஆவணங்களை சமர்ப்பித்தார்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த நிலையில் அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக் குழு செல்லும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
நீதிபதிகள் வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது, "அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லும் கடந்த ஜுலை மாதம் 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் செல்லும்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 16 தீர்மானங்களும் செல்லும். கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டது செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓபிஎஸ் தரப்பில் வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியானதை அடுத்து சென்னை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிசாமி உருவப்படத்திற்கு பால் அபிஷேகம் செய்தும், பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், ஜெயலலிதா, எம்ஜிஆர் சிலைகள் அருகே புகைப்படங்கள் எடுத்தும் கொண்டாடி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈபிஎஸா! ஓபிஎஸா! - அதிமுக யாருக்கு? - உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு!