சென்னை: அதிமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நாளை ( ஏப். 16 ) எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடுகிறது. அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடக்கவிருக்கும் முதல் செயற்குழு கூட்டம் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஏற்கனவே கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி செயற்குழு அறிவிக்கப்பட்டு பின்னர் அது ரத்து செய்யப்பட்டது. மோடியின் வருகையை காரணம் காட்டி செயற்குழு ரத்து செய்யப்பட்டதாக பேசப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 16 ஆம் தேதி (நாளை) செயற்குழு கூட்டப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
பொதுக்குழு தீர்மானம், பொதுச்செயலாளர் தேர்தல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் அவசர செயற்குழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த நீதிபதிகள், அவசர செயற்குழு கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது எனவும் இடைக்கால நிவாரணம் வழங்க முடியாது எனவும் உத்தரவிட்டனர்.
மேலும், இந்த வழக்கின் இறுதி விசாரணை ஏப்ரல் 20ஆம் தேதி தொடங்குகிறது எனவும் நீதிபதிகள் கூறியிருந்தனர். ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் முப்பெரும் விழா மாநாடு நடத்த ஓபிஎஸ் தரப்பினர் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் நாளை நடைபெறவுள்ள செயற்குழு கூட்டத்தில், கர்நாடகாவில் அடுத்த மாதம் நடைபெற இருக்கும் சட்டப்பேரவை தேர்தல், பொதுச்செயலாளராக ஈபிஎஸ்ஸை அங்கீகரிக்க கோரிய தீர்மானத்தை நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், பொதுச்செயலாளர் பதவிக்கு அதிகாரம் அளித்தல், இந்திய தேர்தல் ஆணையத்தில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்க கோருதல், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை மேற்கொள்ள வாய்ப்புள்ளது. அடுத்ததாக இந்த ஆண்டிற்கான பொதுக்குழுவை கூட்டி அதிலும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்த தீர்மானத்தை நிறைவேற்ற ஈபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: டிடிவி தினகரனுக்கு தூது.. தேனியில் திடீர் ஆலோசனை கூட்டம்.. ஓபிஎஸ்-ன் அதிரடி ஆக்ஷன்!