சென்னை: அதிமுகவின் ஒற்றைத்தலைமை விவகாரத்தால் ஓபிஎஸ் - ஈபிஎஸ் தனித்தனி அணிகளாக செயல்பட்டு வருகின்றனர். அதிமுக பிளவுபடுவதற்கு முன்னதாக ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த பொதுக்குழு செல்லாது என்று ஓபிஎஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜனவரி மாதம் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஓபிஎஸ், ஈபிஎஸ் தனித்தனியாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அறிவித்தனர். அந்த வகையில், டிச.21ஆம் தேதி ஓபிஎஸ் தலைமையில் சென்னையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அதில் ஓபிஎஸ் நியமித்த 100 தலைமை கழக நிர்வாகிகள், 80 மாவட்ட செயலாளர்கள் கலந்துகொண்டாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது.
இதனிடையே எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் டிசம்பர் 27ஆம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த கூட்டம் இன்று (டிசம்பர் 27) சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது. அதிமுக தலைமை அலுவலகத்துக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு மேளதாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை மற்றும் அங்கீகார விவகாரம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த ஹேப்பி நியூஸ்