சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று (நவ.21) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
அதிக அளவிலான அரசியல் கட்சிகள் உள்ள இந்தியாவில், அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து, அனைத்து கட்சிகளும் தங்களை தயார்படுத்திக் கொண்டு வரக்கூடிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தனது பணியைத் தொடங்கி இருக்கிறது.
அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கூட்டம் இன்று (நவ.21) நடைபெறுகிறது. எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ள கூட்டத்தில். பல்வேறு முக்கிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்று கூறப்படுகிறது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், அதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, பூத் கமிட்டி மற்றும் மகளிர் அமைப்புகளை பலப்படுத்துவது, களப்பணிகளை மேற்கொள்வது போன்றவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
முன்னதாக நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டதாக அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. மத்தியில் ஆட்சியில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதாக அறிவிக்கப்பட்ட நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலை தனித்து எதிர்கொள்வதா அல்லது கூட்டணி வைத்துக் கொள்வதா என்பது குறித்து பேச்சுவார்த்தை நடக்கப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேட்டி!