சென்னை: வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மாளிகையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 23) நடைபெற்றது. இதில் 24 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாகக் கூறியதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுவில் இருந்து வெளியேறினர்.
இந்நிலையில் நாளை (ஜூன் 24) டெல்லியில் குடியரசுத்தலைவர் பதவிக்கு, பாஜக கூட்டணிக்கட்சி சார்பாக திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்காக பாஜக சார்பில் கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனால் இன்று இரவு சென்னை விமான நிலையத்தில் இருந்து 9 மணியளவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகனும் தேனி நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திர நாத், சட்டப்பேரவை உறுப்பினர் மனோஜ் பாண்டியன் உள்பட 5 பேர் டெல்லி செல்கின்றனர்.
மேலும் டெல்லி செல்லும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் ஆகியோரைச் சந்தித்து தமிழ்நாடு அரசியல் சூழல் குறித்து பேசவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளன.
அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் தரப்பில் விமான டிக்கெட் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. ஆனால், இன்று டெல்லி செல்லும் விமானத்தில் டிக்கெட் பதிவு செய்யப்படலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ்ஸை சந்தித்த அண்ணாமலை - என்னவா இருக்கும்?