சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று (நவ.12) நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மேலும் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பான முறையில் பட்டாசுகளை பொதுமக்கள் வெடிக்க வேண்டும் என்று பல்வேறு கட்டுப்பாடுகளும், அறிவுரைகளும் சென்னை காவல்துறை சார்பாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
குறிப்பாக, தீபாவளி பண்டிகை அன்று உச்ச நீதிமன்றத்தினுடைய அறிவுறுத்தலின்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த ரசாயன பொருட்களால் தயாரிக்கப்பட்ட பசுமை பட்டாசுகள் மட்டுமே வெடிக்கப்பட வேண்டும் மற்றும் விற்கப்படும் வேண்டும் என்று காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. மேலும், பொதுமக்கள் காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் ஆகிய 2 மணி நேரம் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும் என்று ஏற்கனவே நேரக் கட்டுப்பாட்டை அறிவித்திருந்தது.
ஆனால், தீபாவளிக்கு முந்தைய நாளே பொதுமக்கள் பட்டாசு வெடிக்கத் தொடங்கினர். தீபாவளிக்கு முந்தைய நாள் இரவு முதலே சென்னையில் அதிகமாக பட்டாசு வெடித்ததன் காரணத்தினால், தீபாவளி அன்று காலை முதலே சென்னையில் காற்று மாசு அதிகரித்து காணப்பட்டது. அரசினுடைய அறிவுறுத்தலின்படியும், தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரங்களில் அனைவரும் பட்டாசு வெடிக்க தொடங்கியதையடுத்து, சென்னையில் காற்று மாசு மேலும் அதிகரித்து காணப்பட்டது.
சென்னையில் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு 100-ஐத் தாண்டியே காணப்பட்டது. அதிலும் அதிகபட்சமாக சென்னை கும்மிடிப்பூண்டியின் அந்தோனி பிள்ளை நகர் பகுதியில் 193, அரும்பாக்கம் பகுதியில் 157 என்ற அளவைத் தாண்டி மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளது. சென்னையில் பல பகுதிகளில் இதே நிலைமைதான் நீடிந்திருந்தது. மேலும் ராயபுரம், பொத்தேரி, ஆலந்தூர் போன்ற சில இடங்களில் மட்டும் 100க்கும் குறைவாக காற்றின் மாசு தரக் குறியீடு இருந்தது.
தற்போது அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பொதுமக்கள் பல இடங்களில் பட்டாசுகள் வெடித்ததாகவும், அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே காவல்துறை தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டிருந்தது. அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடித்தல், அனுமதி இல்லாத இடங்களில் பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட விதிமுறைகளை மீறியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
மேலும், தனிப்படை போலீசார் அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
இதையும் படிங்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து - 40 பேரை மீட்கும் பணி தீவிரம்!