12th Examination Fees: அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் சேதுராமவர்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், "12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களிடமிருந்து தேர்வுக்குரிய கட்டணத்தை அந்தந்தப் பள்ளி தலைமையாசிரியர்கள் வசூலித்து அரசுத் தேர்வுகள் துறைக்குச் செலுத்த வேண்டும்.
செய்முறை கொண்ட தேர்வுகளுக்கு 225 ரூபாயும், செய்முறை அல்லாத பாடங்களுக்கு 175 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
அதேபோன்று அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியின, அருந்ததியர் மாணவர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
தேர்வுக் கட்டணங்களை நாளை (ஜனவரி 5) முதல் 20ஆம் தேதிவரை வசூலித்து செலுத்துவதற்கு பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் உத்தரவிட வேண்டும்.
சுயநிதி, மெட்ரிக்குலேஷன், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் படித்து 12ஆம் வகுப்புத் தேர்வு எழுதுபவர்கள் கட்டண விலக்குப் பெறுவதற்குத் தகுதியற்றவர்கள். இதனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடைபெறுவது உறுதியாகி இருக்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: Rowdy Baby Surya Arrest: ரவுடி பேபி சூர்யா கைது