சென்னை:மாநிலங்களவை தேர்தலுக்கான கட்சியின் வேட்பாளர்களை தேர்வுசெய்ய அதிமுகவின் உயர்நிலை கூட்டம் மே 20ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - இபிஎஸ் தலைமையில் நடைபெற்றது. இதிலும் முடிவு எதுவும் எடுக்கப்படாமல் இழுபறி நீடிக்கிறது.
ஜூன் 10ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தலில் தேர்வு செய்ய இருக்கின்றனர். அதிமுக சார்பில் 2 உறுப்பினர்கள் தேர்வாக இருக்கின்றனர். இதனால், அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு யாரை முன்னிறுத்தலாம் என்பது குறித்து அக்கட்சி கடந்த சில தினங்களாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறது.
முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், முன்னாள் எம்.எல்.ஏக்கள் செம்மலை, இன்பதுரை, மதுரை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராஜ் சத்யன் உள்ளிட்டவர்களின் பெயர்கள் பரிசீலனையில் உள்ளது. தென் தமிழ்நாட்டில் இம்முறை முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
சமுதாய அடிப்படையில் இந்த முறை வேட்பாளர்கள் தேர்தெடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிச்சாமி வேட்பாளரை இறுதி செய்யத் தயாராக இருந்தாலும் தற்போது வரை ஓபிஎஸ் இறுதி செய்யாமல் உள்ளதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி என தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: மண்வெட்டியால் வெட்ட பாய்ந்த திமுக வழக்கறிஞர்; வைரலாகும் வீடியோ