ByElection2019: காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தேர்தல் அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தல் அறிவித்த பிறகு, கடந்த இரு தினங்களுக்கு முன் காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கம்பன் கலையரங்கத்தில் நாட்டின் பொருளாதாரம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சி தலைவர் நமச்சிவாயம், முதலமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தினை அரசு கட்டடத்தில் நடத்தியதற்கு அதிமுக கூட்டணி கட்சிகளான பாஜக, என்ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில் இன்று புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தேர்தல் தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், என்ஆர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பாலன், பாஜக மாநிலத் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான சுவாமிநாதன் உள்ளிட்டக் கூட்டணி கட்சியினர் புதுச்சேரி தலைமை தேர்தல் அலுவலர் சூர்பீர் சிங்கைச் சந்தித்தனர்.
அப்போது காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமாரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் தொடர்பானக் கட்சி கூட்டம் அரசு கட்டடத்தில் நடத்த அனுமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பின்னர் இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன், ’ஆளும் காங்கிரஸ் அரசு ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தேர்தல் நன்னடத்தை விதிகளுக்கு புறம்பாக அரசுக்கு சொந்தமான கட்டடத்தில் கூட்டம் நடத்தியுள்ளது. தேர்தல் விதிகளை மீறிய, காங்கிரஸ் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும். இதனைத் தேர்தல் அலுவலர் கண்டுகொள்ளவில்லை. இதனால் தேர்தல் நியாயமான முறையில் நடக்கும் எனும் நம்பிக்கை எங்களுக்கு இல்லை’ என அதிருப்தி தெரிவித்தார்.
இதையும் படிக்கலாமே: இலங்கை அதிபர் தேர்தல் புதிய வரலாறு