சென்னை: ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021 என்ற பெயரில் அதிமுகவின் தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கி வைப்பதற்கான பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், அதிமுக மாவட்டச் செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்துக் கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசும்போது, 2021 சட்டப்பேரவை தேர்தல் அதிக முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருத்தப்படுகிறது. இந்திய துணைக் கணடத்தில் இருக்கிற பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் தமிழகத்தில் ஆட்சி, அரசியல் வராலற்றில் மாற்றம் ஏற்படுமா? என பல்வேறு கருத்துகளை சொல்லி வருகின்றனர். அதற்கு காரணம் நம்மை வழிநடத்திய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களும், இவர்களை எதிர்த்து நின்று அரசியல் செய்த கருணாநிதி என்ற ஆளுமையும் இன்று இல்லை.
எம்.ஜி.ஆர். ஜெயலலிதா, கருணாநிதி போன்ற ஆளுமைகள் இல்லாத தமிழகத்தில் இடையில் புகுந்து பலன் பெறலாம் என பலர் கணக்கு போட்டு வருகின்றனர். இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தமிழகத்தின் வரலாறு மிகவும் மாறுபட்டது. தந்தை பெரியாரின் பகுத்தறிவு கொள்கையை முன்னிறுத்தி அண்ணாவால் அரசியல் துவக்கப்பட்டது. அந்த கொள்கையினாலும், எம்.ஜி.ஆர். பரப்புரையின் காரணமாகவும் தமிழகத்தில் 1967-இல் ஆட்சி அமைந்தது.
கடந்த 50 ஆண்டுகளாக எந்த தேசியக் கட்சியையும் தமிழகத்தின் உள்ளே வர விடாமல் திராவிட இயக்கம்தான் ஆட்சி செய்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்திக் கொண்டு உள்ளே வரலாம் என தேசிய கட்சிகள் நினைக்கின்றனர். திராவிட இயக்கத்திற்கு சொந்தக்காரர் அண்ணா, அவருக்கு பிறகு எம்ஜிஆர் தேர்தலில் வெற்றிபெற்று தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவரின் மறைவிற்கு பிறகு கட்சியில் சில பிரச்னை ஏற்பட்டது. அந்த இயக்கத்தை காப்பாற்ற மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வந்து 16 ஆண்டுகள் தமிழகத்தை சிறப்பாக நடத்தினார். அவர் ஒன்றரை கோடி உறுப்பினர்களை உருவாக்கி மறைந்தார். ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் பல்வேறு சோதனைகளுக்கு பின்னர் அனைவரும் இணைந்து இருபெரும் தலைவர்களாக ஒபிஎஸ்,இபிஎஸ்-ஐ அமைத்துக் கொண்டோம். இந்த நிலையில், சில கருங்காளிகள் கூறுகிறார்கள், கடந்த 4 ஆண்டுகளில் எடப்பாடி ஆட்சியில் தேசியக் கட்சிகளில் குழப்பம் ஏற்படுத்த நினைக்கிறார்கள். இந்த தேசிய கட்சிகள் தமிழகத்தில் திராவிட ஆட்சியை நீக்க வேண்டும் என சூழ்ச்சி செய்கின்றனர் என்று.
திமுகவில் வாரிசு அரசியல் செய்கின்றனர். மூத்த தலைவர்கள் இருக்கும்போது ஸ்டாலின் திமுகவை அபகரித்துவிட்டார். எந்த தேசிய கட்சியானும்,மாநில கட்சியானாலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி ஆட்சி, கூட்டணி மந்திர சபை என யார் கூறி வந்தாலும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், தேவையில்லை, அதிமுக தலைமையில்தான் கூட்டணி , அயராது உழைத்து ஆட்சி அமைப்போம் என்றார்.