சென்னை: இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் +2 படித்து வரும் மாணவன் சின்னத்துரையை, அதே ஊரைச் சேர்ந்த சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்து வந்ததாகவும், அதுகுறித்து அம்மாணவன் பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பு, இரவு நேரத்தில் வீட்டில் இருந்த மாணவன் சின்னத்துரையை சக மாணவர்களில் சிலர் கொடூர ஆயுதங்களால் தாக்கி உள்ளனர்.
தனது சகோதரன் சின்னத்துரையை காப்பாற்ற வந்த அவரது சகோதரியையும் அம்மாணவர்கள் தாக்கியதால் பலத்த காயமடைந்த 2 பேரும், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இந்நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடுமையான தண்டனையைப் பெற்றுத் தர விடியா திமுக அரசின் முதலமைச்சரை வலியுறுத்துகிறேன். எப்போதெல்லாம் மக்கள் விரோத திமுக ஆட்சி நடைபெறுகிறதோ, அப்போதெல்லாம் சாதி, இன மோதல்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளது. மாணவர்களின் பிஞ்சு நெஞ்சில் நஞ்சை விதைப்பது, ஆளும் திமுக ஆட்சியில் தொடர்கதையாக உள்ளது.
கடந்த 4 ஆம் தேதி கல்பாக்கம், புதுப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஒரு விழாவில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில், பொது மேடையில் பெண் ஆசிரியையிடம் ஆளும் திமுக நிர்வாகி அநாகரீகமாகவும், தரக்குறைவாகவும் நடந்து கொண்ட சம்பவம் குறித்து தமிழகமே வெட்கித் தலை குனிந்தது. இச்சம்பவத்திற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.
இதுபோன்ற சம்பவங்கள் மூலம் மாணவர்கள் நல்ஒழுக்கத்தையும், நீதி போதனைகளையும் பெறுவதை திமுக நிர்வாகிகள் தடுக்கின்றனர். பள்ளி மைதானத்தில் காலை பிரார்த்தனை (Prayer) நடைபெறும் போதே, ஆசிரியரை திமுக நிர்வாகிகள் தாக்குவது, கள்ளக்குறிச்சி பள்ளிச்சம்பவம் என்று விடியா ஆட்சியில் நடைபெற்ற சம்பவங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
இன்றைக்கு, தமிழ்நாடெங்கும் தங்கு தடையின்றி கிடைக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்களினால் இளைஞர்கள், மாணவர்கள் உள்ளிட்ட இளைய சமுதாயம் சீரழிவை சந்திப்பது தினசரி நிகழ்வாக உள்ளது. இளைய சமுதாயத்தினரை தவறான பாதைக்கு அழைத்துச் செல்லும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை இரும்புக் கரம் கொண்டு தடுக்க பலமுறை இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியும், உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
எனது தலைமையிலான ஆட்சியில் சாதி, இன மோதல்கள் இன்றி, மக்கள் சகோதரர்களாக ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தனர். சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட்டது. சமூக விரோதிகள் ஒடுக்கப்பட்டனர். சாதி, இன மோதல்கள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழக மக்கள் அமைதியாக தங்களது பணிகளை செய்து வந்தனர்.
ஆனால், இந்த விடியா அரசு பொறுப்பேற்ற 27 மாத காலத்தில், நாள்தோறும் ஏதேனும் ஒரு குற்றச்சம்பவம் நடைபெறுவதும், பிறகு விடியா திமுக அரசு நடவடிக்கை எடுப்பதும், அறிக்கை விடுவதுமே வாடிக்கையாகக் கொண்டுள்ளது. வரும்முன் காப்போம் என்ற எண்ணமே இல்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்றால் என்ன என்று கேட்கும் இந்த விடியா அரசு இனியாவது, மாணவர்களின் மத்தியில் நன்னெறி, நீதி போதனை வகுப்புகளை நடத்தி மாணவ சமுதாயம் சகோதரத்துவத்துடன் நடப்பதற்கு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுக்க காவல் துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி நடப்பதை உறுதி செய்ய வேண்டும். ஜாதி மோதல்களைத் தடுக்க, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கடுமையாக எச்சரிக்க வேண்டும். அதன்மூலம் சாதி, இன மோதல்களின் ஆரம்பப் புள்ளியினை கண்டுபிடித்து, முளையிலேயே அகற்றிட வேண்டும் என்று இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.