சென்னை: ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மார்ச் 9ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட உள்ளதாக அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இந்த கூட்டத்தில் அதிமுகவின் அடுத்தகட்ட நகர்வுகள், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தோல்வி, ஓ. பன்னீர்செல்வம் அணியினரை எதிர்கொள்வது, பொதுச்செயலாளர் தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் என இரண்டு அணிகளாக செயல்பட்டு வந்த நிலையில் பொதுக்குழு கூட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து உரிமையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம் என்று தெரிவித்திருந்தது. இதனால் அதிமுகவில் குழப்பங்கள் நீண்டு கொண்டே செல்கிறது. இந்த மாதம் ஜெயலலிதாவின் 75ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பொதுக்கூட்டங்கள் நடத்த அதிமுக திட்டமிட்டுள்ளது.
இதனிடையே மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது குறித்து ஆலோசனை செய்யப்படும் என்று கூறப்படுகிறது. தேர்தல் தோல்வி காரணமாக ஓ. பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே கருத்து மோதல்கள் வலுப்பெற்று நடைபெற்று கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமி என்னும் துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று ஓ. பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சனம் செய்தார். இதற்கு, முட்டாளின் மூளையில் 300 பூ மலரும் என்று ஓபிஎஸ் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதில் கருத்து தெரிவித்திருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமி தரப்பிடம் அதிமுகவின் தலைமை அலுவலகத்தின் சாவியை வழங்கியது. பொதுக்குழு செல்லும் என்ற தீர்ப்பு வந்ததற்கு பிறகு முதல் முறையாக தலைமை அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி செல்கிறார். அடுத்த கட்டமாக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தி இடைக்கால பொதுச்செயலாளராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிசாமியை நிரந்தர பொதுச்செயலாளராக்க திட்டமிட்டுள்ளனர்.
அது குறித்தும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை செய்கின்றனர். 2024ஆம் ஆண்டு நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தல் நகர்வுகள் குறித்தும் ஆலோனை மேற்கொள்ள இருக்கின்றனர். பொதுக்குழுவில் ஏற்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடுத்தார். அதனை விசாரித்த நீதிபதிகள், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பை விளக்கம் அளிக்குமாறு, மார்ச் 17ஆம் தேதி வழக்கை ஒத்திவைத்தனர். இந்த வழக்கு தொடர்பாகவும் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஓபிஎஸ் நீக்கப்பட்டதற்கான காரணத்தை உடைத்த ஜெயக்குமார்