சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், மாற்றுக்கட்சியினர் திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், தஞ்சாவூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், ஈரோடு, ராமநாதபுரம், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
இதில், 2001-2006 காலகட்ட அதிமுக ஆட்சியின்போது, தொழிலாளர் நலத் துறை அமைச்சராக இருந்த நடராஜன் திமுகவில் இணைந்தார். அவருடன் அவரது மகனும் அமமுக மாவட்டச் செயலாளருமான ஆனந்தன் உள்ளிட்டோரும் இன்று (ஜூலை 21) மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைந்துகொண்டனர்.
அதேபோல் அதிமுக முன்னாள் மக்களவை உறுப்பினர் கோவிந்தராஜன் உள்ளிட்டோரும் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேசிய கோவிந்தராஜன், "ஈரோடு மாவட்டத்திலிருந்து அதிமுக, அமமுக, பாட்டாளி மக்கள் கட்சி என 2,250 பேர் இன்று ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளோம்.
இது கொங்கு மண்டலத்தில் திருப்புமுனையாக அமையும். இது முதற்கட்டம்தான். கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டையாகும். அதிமுகவின் எதிர்காலம் முடிந்துபோன கதை; அதிமுக தன்னுடைய தனித்தன்மையை இழந்துவிட்டது" என்றார்.