சென்னை பெரியமேட்டிலுள்ள ரயில்வே கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றி வருபவர் மோகனசுந்தரம். அதிமுக பிரமுகரான இவர், அதிமுக சங்க அலுவலகம் முன்பாக அதிமுக பேனரை வைத்துள்ளார்.
இதனைக் கண்ட திமுகவைச் சேர்ந்த பரமசிவம், தேவகுமார், திருவாசகம், முருகன், வெங்கடேசன், குமரன் ஆகியோர் பேனரை அகற்றுமாறு கூறியுள்ளனர்.
இதில் இருதரப்பினருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பரமசிவம் உள்ளிட்டோர் மோகனசுந்தரத்தை கட்டையால் தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அவரை சக ஊழியர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பெரியமேடு காவல் துறையினர் பரமசிவம் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் 2 ஆவது பெருநகர நடுவர் நீதிமன்ற நீதிபதி சந்தோஷ், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக அறிவித்து, பரமசிவம் உள்ளிட்ட ஐந்து பேருக்கு தலா 1 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
குமரன் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
இதையும் படிங்க: சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ ஓட்டுநருக்கு 21 ஆண்டுகள் சிறை