சென்னை: 2020 - 21ஆம் கல்வியாண்டுக்கு மருத்துவ மேற்படிப்பில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 113 காலியிடங்களில் கலந்தாய்வு நடத்தாமல் 90 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டதாகக் கூறி, மருத்துவர்கள் சந்தோஷ்குமார், கீதாஞ்சலி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், தகுதிபெறாதவர்களை மருத்துவ மேற்படிப்பில் சேர்த்த விவகாரத்தில் மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலர்களும் தனியார் கல்லூரிகளுக்கும் இடையிலான சதியின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? கல்லூரிகள் வசூலித்த பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரிக்க சிபிசிஐடி காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி தண்டபாணி முன் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிபிசிஐடி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்குக் கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த, மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழுவின் அப்போதைய செயலாளர் செல்வராஜன்தான் காரணம் எனவும், அவர் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டைகள் எழுந்ததால் வழக்குகூட பதிவுசெய்ய முடியவில்லை என்றும், சிபிசிஐடி தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை மேற்கோள்காட்டிய நீதிபதி, ஓய்வுபெற்ற மருத்துவ மேற்படிப்பு தேர்வுக்குழு முன்னாள் செயலாளர் செல்வராஜனுக்கான ஓய்வூதியப் பலன்களை நிறுத்திவைக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டார்.
அதேபோல இந்த முறைகேட்டில் தொடர்புடைய அடையாளம் தெரிந்த, அடையாளம் தெரியாத நபர்களுக்கும், தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் எதிராக வழக்குப்பதிவு செய்யும்படியும், மருத்துவக் கல்வி இயக்குநரக அலுவலர்களும் எதிராகவும், சம்பந்தப்பட்ட துறையினருக்கு எதிராகவும் விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு உத்தரவிட்ட நீதிபதி, இந்த விசாரணையில் தொடர்புடைய அலுவலர்களை இடமாற்றம் செய்யக் கூடாது எனத் தமிழ்நாடு டிஜிபிக்கும் உத்தரவிட்டுள்ளார்.
தகுதி இருந்தும், மேற்படிப்பு கனவைத் தொடர முடியாமல் பாதிக்கப்பட்ட இரு மனுதாரர்களுக்கு தலா நான்கு லட்சம் ரூபாயை இழப்பீடாக நான்கு வாரங்களில் வழங்கத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இத்தொகையை மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கைத் தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்துகொள்ளவும் அனுமதித்துள்ளார்.
இந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, அடுத்தகட்ட விசாரணை அறிக்கையை ஏப்ரல் 25ஆம் தேதி தாக்கல்செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை அன்றைய தினத்துக்குத் தள்ளிவைத்துள்ளார்.
இதையும் படிங்க: விளைநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க கூடாது - உயர் நீதிமன்றம் உத்தரவு