அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடர்பாக, கல்லூரி கல்வி இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 109 கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்கள் சேர்ப்பதற்கான தேதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து கல்லூரி கல்வி இயக்குநர் பூரணச்சந்திரன் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில், ''109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி கல்லூரி முதல்வர்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.
*ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ள விண்ணப்பம் குறித்த விபரங்களை ரகசிய முறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும். தரவுகளை பிற நிறுவன முகமைளுக்கு அனுப்பவோ, பகிரவோ கூடாது.
*ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ள மாணவர்களின் விண்ணப்பத்தில் கூறப்பட்டுள்ள விபரங்களை அவர்களால் பதிவேற்றம் செய்யப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு மாணவர் சேர்க்கை குழு சரி பார்க்க வேண்டும். அவற்றில் ஆவணங்கள் ஏதாவது தேவைப்பட்டால் விண்ணப்பத்துடன் அளிக்கப்பட்டுள்ள செல்போன் மூலம் தொடர்புகொண்டு விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
*பின்னர் மாணவர்களுக்கு பாட வாரியாகவும், சிறப்பு பிரிவு வாரியாகவும் தரவரிசை பட்டியல் தயார் செய்தல் வேண்டும். ஊர்ப் பாட பிரிவுகளுக்கும் இட ஒதுக்கீட்டு நெறிமுறைகளின்படி தகுதிவாய்ந்தோர் பட்டியல் தவறாது தயார் செய்ய வேண்டும்.
*ஒரு மாணவர் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பம் செய்திருந்தால் ஒவ்வொரு பாடப்பிரிவின் தரவரிசைப் பட்டியலிலும் மாணவர் பெயர் இடம்பெற வேண்டும்.
*ஒரே மாணவர் ஒன்றிற்கு மேற்பட்ட பாடப்பிரிவுகளுக்கு தரவரிசைப் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டால் அதனை கண்டறிந்து அந்த மாணவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு அவரது விருப்பத்தின் அடிப்படையில் ஒப்புதல் கடிதம் பெற்று ஒதுக்கீட்டு ஆணை தயார் செய்ய வேண்டும். தொடர்பு கொள்ள இயலவில்லை என்றால் அவரது விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விருப்ப வரிசை அடிப்படையில் ஒதுக்கீட்டு ஆணை தயார் செய்யலாம். மாணவரை தொடர்பு கொண்ட விபரங்களை பதிவு செய்ய வேண்டும்.
*அரசின் விதிமுறைகளின்படி ஓரிடத்திற்கு இரண்டு மாணவர்களை தேர்வு செய்து அவர்களது சான்றிதழ்களை சரிபார்த்து சேர்க்கை பட்டியல் தயார் செய்ய வேண்டும். சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்ட மாணவர் பதினோராம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளாரா என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* ஒவ்வொரு பாடப்பிரிவுகளுக்கும் மாணவர் சேர்க்கைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்களுக்கு அதன் விபரத்தினை ஆகஸ்ட் 26ஆம் தேதிக்குள் இ-மெயில் அல்லது எஸ்எம்எஸ் மூலம் மாணவர் சேர்க்கைக்கான வழிமுறைகள் மற்றும் கட்டண விபரங்களை தெளிவாக தெரிவிக்க வேண்டும்.
*மாணவர் சேர்க்கையின் போது முதலில் சிறப்பு பிரிவினருக்கான இடங்களையும், தொடர்ந்து பொது பிரிவினருக்கான இடங்களையும் நிரப்ப வேண்டும். இதுகுறித்த அறிவிப்புகளை இணையதளத்தில் வெளியிட வேண்டும்.
*சிறப்புப் பிரிவினருக்கு ஆகஸ்ட் 28ஆம் தேதி சேர்க்கையை நடத்திட வேண்டும். ஆகஸ்ட் 29ஆம் தேதி முதல் செப்டம்பர் 4ஆம் தேதி வரை பொது பிரிவினருக்கான முதற்கட்ட மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க வேண்டும்.
*மாணவர்கள் சேர்க்கை கட்டணத்தை மின்னணு முறையில் செலுத்த வசதிகளை கல்லூரி முதல்வர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
*மாணவர் சேர்க்கையின்போது covid-19 தொடர்பாக நடைமுறையில் உள்ள முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு முறைகளை பின்பற்றுவதை கல்லூரி முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.
*கணினி எழுத்தறிவு திட்டம், சாப்ட் ஸ்கில் சி மற்றும் இதர பயிற்சி வகுப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு ஊக்குவித்தல் வேண்டும். மாணவர்கள் குழு காப்பீட்டு திட்டத்தில் சேர தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
*தேவைப்பட்டால் கடந்த கல்வி ஆண்டில் பெறப்பட்டது போல் 20 சதவீதம் கூடுதல் இடங்களுக்கு அரசின் ஒப்புதல் கேட்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 'தமிழ்நாட்டில் உள்ள 109 அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரிகளில், செம்படம்பர் 28ஆம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது. குறிப்பாக, முதல் நாளான ஆகஸ்ட் 28ஆம் தேதி சிறப்புப் பிரிவினருக்கும்; ஆகஸ்ட் 29ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 4ஆம் தேதி வரை, பொதுப் பிரிவினருக்குமான கலந்தாய்வு நடத்தப்படும்' என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பருவத்தேர்வு முடிவுகளை அண்ணா பல்கலை. உடனடியாக வெளியிட உத்தரவு!