சென்னை: தமிழ்நாட்டி தொழிற்கல்விப் படிப்புக் கல்லூரிகளில் மாநில அரசின் இட ஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்க, அரசால் ஓய்வு பெற்ற டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.கே.முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி பொறியியல், கால்நடை, மீன்வளம், சட்டம், வேளாண்மை உள்ளிட்ட தொழிற்கல்விப் படிப்புகளில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் சிறப்பு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து இடஒதுக்கீட்டின் கீழ், நடப்பு ஆண்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
தரவரிசைப் பட்டியல் வெளியீடு
இந்நிலையில் பொறியியல் படிப்பில் உள்ள பிஇ, பிடெக் பாடப்பிரிவுகளில் சேர மாணவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில், ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 33 தகுதியுடைய மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த 14ஆம் தேதி www.tneaonline.org என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டது.
இதில் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 15 ஆயிரத்து 660 பேருக்கு தனியாக தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் பொதுப்பிரிவில் 15 ஆயிரத்து 161 பேரும், தொழிற்கல்விப்பிரிவில் 499 பேரும் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றனர்.
பின்னர் அரசுப் பள்ளியில் படித்து தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களை பிடித்தோர், 48 விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 20 பேர் ஆகியோருக்கு செப்டம்பர் 15ஆம் தேதி நேரடியாக ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டது.
இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கல்
இதில் இட ஒதுக்கீட்டுட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 50 மாணவர்களுக்கு, கல்லூரி ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி செப்டம்பர் 20ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது.
அப்போது தொழிற்கல்விப் படிப்பில் அரசுப் பள்ளி இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான அனைத்து கட்டணங்களையும் அரசே செலுத்தும் எனவும் முதலமைச்சர் அறிவித்தார். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர செப்டம்பர் 17 முதல் 19ஆம் தேதி வரை, 11 ஆயிரத்து 169 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்கள் சேர விரும்பும் கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை, செப்டம்பர் 20, 21 ஆம் தேதி மாலை 5 மணி வரையில் பதிவு செய்யவும் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி செப்டம்பர் 22 ந் தேதி தற்காலிக ஒதுக்கீடு மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு, 24ஆம் தேதி ஆன்லைன் மூலம் இறுதி ஒதுக்கீட்டு உத்தரவு வழங்கப்பட்டது.
சிறப்புப் பிரிவில் 6,442 பேர் உத்தரவு
அதில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 4 பேர், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 18 பேர், விளையாட்டுப் பிரிவில் 32 பேர், பொதுப்பிரிவில் 5 ஆயிரத்து 837 பேர், தொழிற்கல்விப்பிரிவில் 81 பேர் என 5 ஆயிரத்து 972 இடங்களை தேர்வு செய்தனர்.
சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 132 பேர், விளையாட்டு பிரிவு மாணவர்கள் 222 பேர், மாற்றுத்திறனாளி மாணவர்கள் 116 பேர் என 470 இடங்கல் நிரப்பட்டன. மொத்தமாக இடஒதுக்கீடு, சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வின் மூலம் 6 ஆயிரத்து 442 பேர் கல்லூரி இடங்களை தேர்வு செய்துள்ளனர்.
இது குறித்து கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசுகையில், “சிறப்பு பிரிவு கலந்தாய்வின் மூலம் 6 ஆயிரத்து 442 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். அவர்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் மூலம் 5 ஆயிரத்து 972 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இந்த திட்டம் மிகவும் வரவேற்கத்தக்கது” என்றார்.
இதையும் படிங்க: அடுத்த மாதம் 1-8 வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு? - அன்பில் மகேஷ் சூசகம்